ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் நகை கொள்ளை
3/16/2018 2:57:31 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ளது அத்திப்பள்ளி. இப்பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் ரெட்டி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் அத்திபள்ளியில் ஷாகம்பரி லே அவுட்டில் வசித்து வருகிறார்.நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் 15 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திடீரென நாகராஜின் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டு நாகராஜ் மற்றும் அவரின் மனைவி, குழந்தைகள் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது வீட்டினுள் மர்ம நபர்கள் புகுந்தது தெரிந்தது. இந்நிலையில் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில், நாகராஜ் ரெட்டி மற்றும் மனைவி, குழந்தைகளை மிரட்டினர். பின்னர் அவர்கள் மூலம் பீரோவில் இருந்த 50 லட்சம் மதிப்புள்ள நகைகள், 50ஆயிரம் ரொக்கம் மற்றும் சில நிலஆவணங்களை கொள்ளையடித்தனர்.
பின்னர் அங்கிருந்து கொள்ளை கும்பல் தப்பி சென்றது. இதுபற்றி நாகராஜ் ரெட்டி அத்திப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தெலுங்கு மொழி பேசியதால் அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.