எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது : தங்கதமிழ்செல்வன் பேச்சு
1/19/2018 3:50:59 PM
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில், டிடிவி தினகரன் அணி சார்பில், எம்ஜிஆரின் 101வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், டிடிவி தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் பேசியதாவது: தமிழகத்தில் இன்றைய ஆட்சியாளர்கள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக கூறி கூட்டத்தை கூட்டி, அதில் எம்ஜிஆரை பற்றி எதுவும் பேசாமல், எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று சம்பந்தமின்றி பேசி வருகின்றனர். மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர். ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு பின், ஆளும்கட்சியினருக்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும், அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எந்த நடிகரும் ஆறுதல் சொல்லக்கூட செல்லவில்லை. வருகிற 22ம் தேதி, எம்எல்ஏ தகுதி நீக்கம் குறித்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க கூறியுள்ளனர். அதன் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் ஏற்போம். ஆர்கே நகரில் வெற்றி பெற்று தனி ஆளாக சட்டசபைக்கு செல்லும் டிடிவி தினகரனை பார்த்து இன்றைய ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். எங்களை நீக்கியது செல்லாது எனக்கூறி, நாங்கள் மீண்டும் சட்டசபைக்கு சென்றால், அவர்களின் பாடு திண்டாட்டம் தான்.