இஸ்ரோவின் 100வது செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது
1/11/2025 4:31:45 PM
சென்னை : இஸ்ரோ தயாரித்துள்ள 100வது செயற்கைகோள் உள்பட மொத்தம் 31 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் நாளை காலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட் டவுன் இன்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது. இஸ்ரோ தயாரித்த ஐஆர்என்எஸ்எஸ் 1எச் என்ற செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி39 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனால், சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தபின் செயற்கைக்கோள் ராக்கெட்டை விட்டு வெளியேறவில்லை. மேலும் வெப்ப பாதுகாப்பு தகடு பிரிவதில் கோளாறு ஏற்பட்டதால் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், நீண்ட நாட்களாக பிஎஸ்எல்வி ராக்கெட் ஏதும் விண்ணுக்கு அனுப்பப்படாமல் இருந்தது. இதையடுத்து, இதற்கான ஆய்வு கமிட்டி ஜனவரியில் ராக்கெட் ஏவுவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக பலகட்ட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் நாளை காலை 9.28 மணிக்கு ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட் டவுன் இன்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது. பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்டில் மொத்தம் 31 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் 28 செயற்கைகோள்கள் அமெரிக்கா, பின்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சொந்தமானவை. 3 செயற்கைகோள்கள் இந்தியாவிற்கு சொந்தமானவை. மேலும், இந்தியாவிற்கு சொந்தமான 3 செயற்கைகோள்களில் புவியை கண்காணிக்கும் 710 கிலோ எடைகொண்ட கார்டோசாட்-2 வரிசை செயற்கைகோளும் ஏவப்படுகிறது. நாளை பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் சுமந்து செல்லும் 31 செயற்கைகோள்களில் இஸ்ரோ தயாரித்த 100வது செயற்கைகோளும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.