போகி பண்டிகையன்று காற்று மாசை கண்டறிய சென்னையில் 15 இடங்களில் ஆய்வு
1/11/2025 4:25:49 PM
சென்னை : போகிப்பண்டிகையான நாளை மறுநாள் காற்று மாசை கண்டறிய சென்னையில் 15 இடங்களில் ஆய்வு நடத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் சனிக்கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகியன்று பழைய பொருட்களை நள்ளிரவு முதல் அதிகாலை வரை வீட்டு முன்பு போட்டு தீயிட்டு கொளுத்துவது வழக்கமாகி வருகிறது. இந்தப் பழக்கம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வீட்டில் உள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பாய்கள், துணிகளை எரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. தற்போது பனி அதிகமாக பெய்து வருகிறது. இதனால், புகையும் அதிகமாக இருந்தால், காலையில் வாகனங்கள் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பல நேரங்களின் மின்சார ரயில்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புகையினால், கந்தக டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு ஆகிய வாயுக்கள் வெளியாவதால், வயதானவர்கள், சிறுவர்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுகின்றனர்.
மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இவ்வாறு காற்று மாசு ஏற்படுத்தினால், அவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 16ன்படி தண்டனைக்குறிய குற்றமாகும். இதனால் காற்று மாசை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு காற்று மாசை கண்டறிய 15 இடங்களில் ஆய்வு நடத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. இதுதவிர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 15 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர், பிளாஸ்டிக் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறையின் மூலம் புகை மாசு பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று மாசை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகி பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளில் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க காற்று மாதிரியை சேகரித்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.
போகி பண்டிகையின்போது ஏற்படும் காற்று மாசினை தடுக்கும் விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா நேற்று சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் மாநில அளவில் ஓசோன் படலம் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 10 பசுமைப்படை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பரிசுகள் வழங்கினார். மேலும் போகி உறுதிமொழி வாசித்து விழிப்புணர்வு பிரசார வாகனங்களையும் அமைச்சர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காற்று மாசு ஏற்படுத்தினால் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த ஆய்வின்படி கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு அனைத்து இடங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவுக்கும் குறைவாக இருந்தது தெரியவருகிறது. சுவாசிக்க கூடிய காற்றில் உள்ள நுண் துகள்கள் அளவு 8 மண்டலங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்திருப்பது தெரியவருகிறது. மேலும் நுண்துகள்களின் அளவு 7 சதவீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவருகிறது.