அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு ஆர்வத்துடன் இளைஞர்கள் முன்பதிவு
1/11/2025 3:47:31 PM
அலங்காநல்லூர் : அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான மாடுபிடி வீரர்களின் முன்பதிவு இன்று காலை துவங்கியது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டுக் கொண்டு, தங்களது பெயர்களை பதிவு செய்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன. சென்னை மெரினாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு, அறவழியில் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டு பொங்கல் திருநாளான ஜன.14 அன்று அவனியாபுரத்திலும், ஜன.15 அன்று பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் இந்த ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கியது. அவனியாபுரத்தில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவும், பாலமேட்டில் மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமான முன்பதிவும் இன்று காலை துவங்கியது. அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் காலை 10 மணி முதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கால்நடை துறை இணை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது பெயர்களை பதிவு செய்தனர். மாடுபிடி வீரர்களுக்கான பதிவு டோக்கன்கள் வழங்கும் பணி, அவனியாபுரம் விஏஓ அலுவலகத்தில் தெற்கு தாசில்தார் சந்திரமோகன் தலைமையில் இன்று காலை துவங்கியது.
இதில் பதிவு செய்த வீரர்களுக்கு, போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வரும் 13ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் வரும் 14ல் நடைபெற உள்ள மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே மாடுபிடி வீரர்களுக்கு ஜல்லிக்கட்டில் களம் இறங்க முறையான அனுமதி கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலமேட்டில் நேற்று நள்ளிரவே இளைஞர்கள் குவிந்தனர். இரவு முழுவதும் நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்தனர். இன்று காலை 7 மணியளவில் பாலமேடு பேரூராட்சி சமுதாய கூடத்தில் முன்பதிவு தொடங்கியது. ஆதார் அட்டை, 2 புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்தனர். பதிவு செய்த இளைஞர்களுக்கான உடல் தகுதி சோதனையும் இன்றே நடந்தது. டாக்டர்கள் குழுவினர் இளைஞர்களின் உயரம், எடை உள்ளிட்ட உடல் தகுதிகளை சரி பார்த்து, முன்பதிவு அடையாள அட்டை வழங்கினர். நாளை பாலமேட்டில் காளைகளுக்கான முன்பதிவும், அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவும் நடைபெற உள்ளது.