20 விக்கெட்களை வீழ்த்தி என்ன பயன்? முன்னெப்ேபாதும் இல்லாத தீவிரத்துடன் விளையாடுங்கள்: இந்திய வீரர்களுக்கு கோஹ்லி வலியுறுத்தல்
1/9/2025 3:41:40 PM
கேப்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி என்றாலே, சுழற்பந்து வீச்சுதான் பிரதானம். ஆனால் சமீப காலமாகதான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு வலுவடைந்து வருகிறது. கேப்டவுன் நியூலேண்ட்ஸ் போன்ற உலகின் கடினமான ஒரு ஆடுகளத்தில், தென் ஆப்ரிக்காவின் 20 விக்கெட்களையும் விரைவாக வீழ்த்தி, வெற்றிக்கான பாதையை வேகப்பந்து வீச்சாளர்கள் அழகாக அமைத்து கொடுத்தனர். மொத்தமுள்ள 20 விக்கெட்களில், 17 விக்கெட்களை கைப்பற்றியது வேகப்பந்து வீச்சாளர்கள்தான். 2 விக்கெட்கள் அஸ்வினுடையது. ஒன்று ரன் அவுட். ஆனால் நட்சத்திர அடையாளம் கொண்ட பேட்ஸ்மேன்களின் குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தடுமாற்றத்தால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்து விட்டது.
இது குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘’ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல 20 விக்கெட்களை வீழ்த்துவதுதான் முதன்மையானது. ஆனால் பேட்ஸ்மேன்கள் சரியாக பேட்டிங் செய்யாவிட்டால், அது ஒன்றுமில்லாதது போல் ஆகிவிடும். எதிரணியின் டோட்டலுக்கு நெருக்கமாக செல்லாவிட்டால், 20 விக்கெட்களை எடுத்தோமா? இல்லையா? என்பது ஒரு விஷயமே இல்லாதது போல் ஆகி விடும். ஆனால் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத தீவிரத்துடன் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும்’’ என்றார்.