தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோல்வி ரஹானேவுக்கு பதில் ரோகித் சர்மாவை தேர்வு செய்ய காரணம் என்ன?
1/9/2025 3:41:08 PM
கேப்டவுன்: கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டி வில்லியர்ஸ் 65, கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் 62 ரன்கள் எடுத்தனர். புவனேஸ்வர் குமார் 4, அஸ்வின் 2, ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா முதல் இன்னிங்ஸில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் விளாசினார். பிளாண்டர், ரபாடா தலா 3, ஸ்டெயின், மோர்கல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 77 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்ரிக்கா 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 35 ரன்கள் எடுத்தார். ஷமி, பும்ரா தலா 3, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா 135 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக அஸ்வின் 37 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிளாண்டர் 6, ரபாடா, மோர்கல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 3, 2வது இன்னிங்ஸில் 6 என மொத்தம் 9 விக்கெட்களை வீழ்த்தி, இந்திய பேட்டிங் ஆர்டரை சுக்கு நூறாக நொறுக்கிய தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிளாண்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
எதிர்பார்த்தது போலவே, பந்து நன்கு எழும்பி வரும் தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் தொடர்வது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக தென் ஆப்ரிக்கா உள்பட அயல்நாட்டு ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடும் ரஹானேவுக்கு பதிலாக விளையாடும் லெவனில் ரோகித் சர்மாவை தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்வியுடன், கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஏனெனில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ரோகித் சர்மா எடுத்த ரன்கள் 21 (11, 10) மட்டுமே. ஆனால் இந்த தேர்வை இந்திய கேப்டன் விராட் கோஹ்லி நியாயப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போதைய பார்ம் அடிப்படையில்தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா நன்றாக ரன்களை ஸ்கோர் செய்தார் (இலங்கைக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 இன்னிங்ஸ்களில் ரோகித் சர்மா 217 ரன்களை குவித்தார். ஆனால் ரஹானே 5 இன்னிங்ஸ்களில் 17 ரன்களை மட்டுமே எடுத்தார்). எனவே இந்த வீரர்களுடன்தான் களமிறங்குவது என முடிவு செய்திருந்தோம். நிச்சயமாக தற்போதைய பார்ம்தான் அளவுகோலாக இருந்தது என்றார். ஆனால் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, 4 இன்னிங்ஸ்களில் ரஹானே 209 ரன்களை ஸ்கோர் செய்தது குறிப்பிடத்தக்கது. எனவே 2வது டெஸ்ட் போட்டியில், ரஹானேவை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுவடைய தொடங்கியுள்ளன. 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் வரும் 13ம் தேதி சென்சூரியனில் தொடங்குகிறது.
ஹர்திக் பாண்டியாவுக்கு கபில்தேவ் பாராட்டு
முதல் இன்னிங்ஸில் ஹர்திக் பாண்டியா எடுத்த 93 ரன்களின் உதவியுடன்தான் இந்தியா ஓரளவு கவுரமான ஸ்கோரை பதிவு செய்தது. அத்துடன் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்திய அணியின் அடுத்த கபில்தேவ் யார்? என்ற நீண்ட நெடிய தேடலுக்கு விடையாக கிடைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இது குறித்து கபில்தேவ் கூறுகையில், இதற்கு காலம் பதில் சொல்லும். அதற்கு சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் அடுத்த தரமான ஆல் ரவுண்டராக உருவெடுப்பதற்கான அனைத்து திறன்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு உள்ளது என்றார்.