ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்
12/23/2017 6:01:08 PM
சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ராமேஸ்வரம் வந்தார். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்த அவர், பின்னர் பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தை பார்வையிட்டார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு 12 எஸ்பிக்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசாருடன் ராமேஸ்வரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், 10.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மதுரை கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மதுரையில் இருந்து ஜனாதிபதியும், கவர்னரும் ராமேஸ்வரம் சென்றனர். அங்கு ராமநாதசுவாமி கோயிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ராமேஸ்வரம் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த ஜனாதிபதி, பகல் 1.25 மணிக்கு பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று, அஞ்சலி செலுத்தினார்.
பின்பு மதியம் 2 மணிக்கு ஜனாதிபதியும், கவர்னரும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை சென்றனர். ஜனாதிபதி வருகையையொட்டி மண்டபம் முதல் ராமேஸ்வரம் கோயில் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 12 எஸ்.பி.க்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமநாதசுவாமி கோயில், அப்துல்கலாம் நினைவிடம், மண்டபம் ஹெலிபேடு தளம் ஆகியவற்றில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் சோதனையிட்டனர். ஜனாதிபதி வருகையை தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து இன்று மாலை வரை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. இந்தநிலையில், மதுரையில் இருந்து மாலை 3.30 மணிக்கு தனி விமானத்தில் ஜனாதிபதி சென்னை புறப்பட்டார். மாலை 4.35 மணிக்கு சென்னை வந்ததும் ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மாலை 4.50 மணிக்கு காரில் கிண்டி கவர்னர் மாளிகைக்கு வந்தடைந்தார். மாலை 5.45 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். பின்னர் மாலை 6.35 மணிக்கு மீண்டும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை (24ம் தேதி) காலை 9.30 மணியில் இருந்து 10 மணி வரை கிண்டி கவர்னர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். அதன் பின்னர் காரில் புறப்பட்டு 10.15 மணிக்கு பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு வழியனுப்பும் நிகழ்ச்சி முடிந்ததும், 10.25 மணிக்கு தனி விமானத்தில் ஐதராபாத்துக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பழைய விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ஜனாதிபதிக்கான சிறப்பு பாதுகாப்பு படையினரும் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.