2ஜி வழக்கு தீர்ப்பால் திமுக அணி வலுப்பெறும்: திருமாவளவன் பேட்டி
12/22/2017 3:26:36 PM
திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று திருச்சி வந்தார். விமானநிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
ஆர்கே நகர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்துள்ளது. இதில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன். 2ஜி வழக்கில் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்துக் ெகாண்டிருந்தவர்கள் ஏராளம். யாரும் எதிர்பாராத வகையில் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க கூடிய வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. வினோத்ராயின் அதிகார வரம்பு மீறல், தேசத்தின் மீதான நன்மதிப்பை உலக அரங்கில் பாதிப்படைய செய்து, தலைகுனிய செய்துள்ளது. அவர் ஒருலட்சத்து எழுபதாயிரம் கோடி என சொல்ல, அதை அரசியல் கட்சிகள் கையில் எடுத்து பிரசாரம் செய்ய இந்திய அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது, காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணிகட்சிகள் பெரிய பாதிப்படைந்தது. தனிப்பட்ட முறையில் திமுகவின் மீதான நம்பிக்கை தளர்ந்தது. தயாளு அம்மாள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார், கனிமொழி, ராசா ஆகியோர் சிறைப்படுத்தப்பட்டார்கள்.
தனது அதிகார வரம்பை மீறி அரசு கோப்பில் உள்ள தகவலை கற்பனைக்கு ஏற்றவாறு வெளியிட்ட வினோத்ராய் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும். அந்த தகவலை வைத்துக்கொண்டு ெபாய் வழக்கு போட்ட சிபிஐ இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். பொய் வழக்கு போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்்டதிருத்தம் கொண்டு வரவேண்டும். இந்த தீர்ப்பு ஆர்கே.நகர் தேர்தலில் இளம் தலைமுறை வாக்காளர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். திமுகவுடன் பாஜ கூட்டணி என்று கூறுவது வெறும் கற்பனை. பா.ஜ வை சேர்ந்த ஒரு சிலர் மதவெறியை நிலைநாட்டி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் எடுத்துச்செல்கிறார்கள். அதை நாங்கள் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழகத்தில் மதம்சார்ந்த பிரச்னைகள் ஒருபோதும் தலைதூக்க விடமாட்டோம். 2ஜி வழக்கிலான தீர்ப்பு திமுக கூட்டணியை வலுப்படுத்தும். மதவாத சக்திகளை தலைதூக்கவிடாமல் தடுக்கும். ஜெ.சிகிச்சை குறித்த விபரங்களை முழுமையாக மக்கள் நம்பக்கூடிய வகையில் தெளிவுபடுத்தும் பொறுப்பு சசிகலா தரப்புக்கும் இருக்கிறது.