ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு வரக்காரணம் என்ன?: அரசு டாக்டரிடம் நீதிபதி சரமாரி கேள்வி
12/22/2017 3:26:02 PM
சென்னை: ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு வரக்காரணம் என்ன என்று அரசு டாக்டரிடம் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகச்சாமி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் இதுவரை 28 பிரமாண பத்திரங்களும், 422 புகார் மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில், திமுக மருத்துவர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இவர்கள் பல்வேறு தகவல்களை நீதிபதியிடம் தெரிவித்தனர். குறிப்பாக, ஜெயலலிதா உறவினர்கள் அனைவரும் அவரது மரணத்தில் தங்களுக்கும் சந்தேகம் இருக்கிறது என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். இதற்கு போயஸ்கார்டனில் உள்ள ஊழியர்களை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவில் இடம் பெற்ற டாக்டர்கள் பாலாஜி, முத்துசெல்வன், தர்மராஜ், கலா, டீன் நாராயணபாபு, முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் விமலா உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதில், டாக்டர் பாலாஜி மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவரிடம் சிகிச்சை அளித்த டாக்டர்களை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார். அவர் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக வரும் 27ம் தேதி அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி கார்டியாக் அரெஸ்ட்(மாரடைப்பு) காரணமாக சாதாரண வார்டில் இருந்து மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அப்போது, அவருக்கு இருதய சிகிச்சை துறை பிரிவு டாக்டர் தினேஷ் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
எனவே, அவரிடம் விசாரணை நடத்த நீதிபதி முடிவு செய்தார். இதற்காக, அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிபதி சம்மன் அனுப்பினார். இந்த நிலையில், அவர் இன்று காலை 10 மணியளவில் நீதிபதி முன்பு ஆஜரானார். அவரிடம் நீதிபதி, ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெக்ஸ்ட் எப்போது வந்தது. அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது. எத்தனை டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்?, ஜெயலலிதா உயிர் எப்போது பிரிந்தது, திடீரென அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வரக்காரணம் என்ன? என்று சரமாரி கேள்வி எழுப்பினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் டாக்டர் தினேஷ் உரிய விளக்கம் அளித்தார். அவரது வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.