பெயின்டருக்கு சரமாரி வெட்டு: பிரபல ரவுடி கைது
10/31/2017 4:06:46 PM
ஆவடி: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பரசு (28). இவர் பெயின்டர். இவரது பக்கத்து வீட்டில் பிரபல ரவுடி அப்பன்ராஜ் (33) வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறின்போது அன்பரசை, அப்பன்ராஜ் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இவ்வழக்கில் அப்பன்ராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அப்பன்ராஜ், ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு வந்து கொண்டிருந்த அன்பரசுவை, அப்பன்ராஜ் வழிமறித்து, ‘என்மீது போலீசில் புகார் செய்தாயா’ என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அன்பரசுவை, சரமாரியாக வெட்டிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் அடிப்படையில், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்கு பதிவு செய்து ரவுடி அப்பன்ராஜை நேற்று மாலை கைது செய்தனர். அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.