தமிழக காங்கிரஸ் தலைவர் யார்?: ராகுல்காந்தியுடன், திருநாவுக்கரசர் இன்று சந்திப்பு
10/13/2017 3:36:56 PM
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இன்று ராகுல்காந்தியை சந்தித்து பேசுகிறார். தமிழக காங்கிரஸ் கட்சியில் 20 ஆண்டுகளுக்கு பின்பு உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து கடந்த வாரம் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூடியது. அதில், பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதால், தேர்தல் நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஒப்புதலுடன், ‘தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்திக்கு வழங்குவது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் படி தமிழக காங்கிரஸ் தலைவரை முறைப்படி தேர்வு செய்யும் பொறுப்பு சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் பெயரை மேலிடம் விரைவில் அறிவிக்கும் என திருநாவுக்கரசரும் தெரிவித்தார். இதை தொடர்ந்து, இந்த தீர்மானத்தை ராகுல் காந்தியிடம் வழங்குவதற்காக திருநாவுக்கரசர் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். ராகுல்காந்தியை சந்திக்க இன்று அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, ராகுல்காந்தியை சந்திக்கும் திருநாவுக்கரசர் பொதுக்குழு தீர்மானத்தை வழங்குகிறார். மேலும் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து எடுத்துரைக்கிறார்.
மேலும் திருநாவுக்கரசர் மீது எதிர் கோஷ்டியினர் பல்வேறு புகார்களை ராகுல்காந்திக்கு அனுப்பியுள்ளனர். அது தொடர்பாகவும் திருநாவுக்கரசரிடம், ராகுல்காந்தி விசாரணை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் பெயரை அறிவிப்பது தொடர்பாகவும் அவருடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார். கடந்த 5 மாதத்துக்கு முன்பு மேலிடத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் அனைவரும் அப்படியே தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். அதை போன்று தமிழக காங்கிரஸ் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் சோனியாகாந்திக்கு வழங்கியுள்ளனர். திருநாவுக்கரசர் தலைவராக தொடர்வதை தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற கோஷ்டி தலைவர்கள் விரும்பவில்லை. அவர்கள் மேலிடத்தில் இவரை தூக்குவதற்காக காய் நகர்த்தி வருகின்றனர். அவரை பற்றி பல்வேறு புகார்களை மேலிடத்துக்கு தெரிவித்து வருகின்றனர். இதனால் இவரை மாற்றிவிட்டு வேறு யாரையாவது நியமிக்கவும் வாய்ப்புள்ளது. அதேநேரம் இவர் பதவி ஏற்று ஒன்பது மாதங்களே ஆவதால் இவரே தொடரவும் வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் ராகுல்காந்தியுடனான, திருநாவுக்கரசர் சந்திப்பு காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.