சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் கூடாது குறைந்த விலையில் தின்பண்டம்: அரசிடம் வலியுறுத்த விஷால் முடிவு
10/13/2017 3:35:45 PM
சென்னை: சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது, எம்ஆர்பி விலைக்குதான் தின்பண்டங்கள் விற்க வேண்டும் என்று விஷால் தெரிவித்துள்ளார். திரைப்படங்கள் மீது தமிழக அரசு 10 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதித்திருப்பதால், தமிழக அரசு விதித்துள்ள 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் திரையுலகினர் கோரி வருகின்றனர். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் ஏற்கனவே இதுகுறித்து கூறும்போது, ‘கேளிக்கை வரி ரத்து செய்யப்படும்வரை புதிய படங்களை வெளியிட மாட்டோம்’ என்று தெரிவித்திருந்தார். அதன்படி சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தியேட்டர் அதிபர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. சுமூக முடிவு ஏற்படவில்லை. ஆனால் தியேட்டர்களில் குறிப்பிட்ட சதவீதம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பை மல்டி பிளக்ஸ் தியேட்டர்காரர்கள் வரவேற்றிருந்தாலும் தனி திரை அரங்கு நடத்துபவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.
அரசு நிர்ணயித்த விலைக்குத்தான் டிக்கெட் விற்பது, கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் திரையுலகினர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதுகுறித்து விஷால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’நாளை முதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைத்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும். கேன்டினில் எம்ஆர்பி விலைக்குதான் தின்பண்டங்கள் விற்க வேண்டும். அம்மா குடிநீர் பாட்டில் தியேட்டர்களில் விற்கப்படவேண்டும். குடிநீர் பாட்டில் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும். பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது. விரைவில் ஆன்லைன் சேவைக்கட்டணம் ரத்து செய்யவேண்டும். மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கோரிக்கைகள் அரசிடம் நடக்கும் பேச்சுவார்த்தையில் வைக்கப்படும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.