ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்
10/8/2025 5:11:53 PM
மாண்டி: இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் வீரபத்ரசிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வீரபத்ர சிங் அங்கு 6 முறை முதல்வராக பதவி வகித்து வருகிறார். அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. எனவே இம்முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜ தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் 7வது முறையாக முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியும் வேகம் காட்டி வருகிறது. இதையடுத்து இமாச்சல பிரதேசத்தில் ராகுல் பிரசார சுற்றுபயணம் செய்து வருகிறார். மாண்டியில் உள்ள பாத்தல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசுகையில், வருகிற தேர்தலில் வீரபத்ர சிங் தான் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர். அவர் 6 முறை பதவி வகித்து விட்டார். 7வது முறையாகவும் அவரே வெற்றி பெறுவார். ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியும் அவருக்கு ஆதரவாக உள்ளது.
2 கோடி பேருக்கு வேலை தருவோம் என பாஜ அரசு கூறியது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற பிரதமர் மோடி தவறிவிட்டார். ஒவ்வொரு நாளும் சுமார் 30 ஆயிரம் பேர் வேலை தேடுகின்றனர். அவர்களில் 450 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. ஆனால் சீனாவில் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. மத்திய அரசு அவசர கோலத்தில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் 30 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்.
ஜிஎஸ்டியால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரன்சி வாபஸ் நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து விட்டது. இதனால் எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜ ஆளும் மாநிலங்களில் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்ததும் வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்துவோம் என மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் ஒரு நயா பைசாவை கூட வழங்காமல் மக்களை முட்டாளாக்கியுள்ளார். மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மக்களை ஏமாற்றி விட்டன என்று ராகுல் சாடினார்.