வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்: பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
10/8/2025 5:10:33 PM
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இன்று காலை சிறப்பு முகாம் தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.இந்திய தேர்தல் ஆணையம் வருகிற ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2018ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.இச்சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அது மாநகராட்சி மண்டல அலுவலகம், வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தாரது பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா?, இல்லையா என்பது குறித்து சரிபார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அக்டோபர் 8 மற்றும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.அதன்படி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்தனர். சில இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்ற காட்சியை காண முடிந்தது.
சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3768 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடந்தது. அங்கேயே அவர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டன. அதனை பூர்த்தி செய்து வழங்கினர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் ஜனவரி 1ம் தேதி அன்று 18 வயது நிறைவு பெறுபவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்கினர். பெயர் நீக்கத்துக்கு படிவம் 7, பட்டியலில் திருத்தத்துக்கு படிவம் 8, சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஏஐ பூர்த்தி செய்து வழங்கினர். மேலும் பொதுமக்கள் www.elections.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இதில் ஆண்கள் 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 பேரும், பெண்கள் 3 கோடியே 98 ஆயிரத்து 268 பேரும், இதர பிரிவினர் 5242 பேர் இடம் பெற்றிருந்தனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியில் 4,07,3703 வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தக்கட்டமாக வருகிற 22ம் தேதி இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. புதிய வாக்காளர்களுக்கு ஜனவரி 5ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.