இந்திய எல்லையில் உள்ள டோக்லாமில் சீனா மீண்டும் அத்துமீறல்
10/6/2025 3:03:01 PM
புதுடெல்லி: டோக்லாம் எல்லையில், சீனா சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லை பகுதிக்கு சீனா மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால், பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் இதே டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க முயற்சித்த போது இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எல்லையில் இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சீனா படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதால் போர் பதற்றம் ஏற்பட்டது. ஏறக்குறைய 70 நாட்கள் நீடித்தது இந்த பிரச்சினை. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா செல்ல மோடி திட்டமிட்டிருந்தார். அவரது பயணத்துக்கு முன்பாக இந்தியா - சீனா இடையே தூதரக அளவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாடுகளின் ராணுவம் பரஸ்பரம் பின்வாங்க சம்மதம் தெரிவித்தன. இந்நிலையில் டோக்லாம் எல்லையில் இருந்து சரியாக 10 கி.மீட்டர் தொலைவில் சீனா சாலையை விரிவாக்கப்பணியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதற்காக சீனா தனது 500 வீரர்கள் பாதுகாப்புடன் இந்த பணி மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த அத்துமீறலால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.