அசாம் அரசு மருத்துவமனையில் பரிதாபம் 22 மணி நேரத்தில் 7 குழந்தைகள் பலி
10/6/2025 3:01:50 PM
கவுகாத்தி: அசாம் மாநிலத்திலுள்ள பக்ரூதீன் அலி முகமது மருத்துவமனையில் 22 மணி நேரத்தில் 7 குழந்தைகள் பலியாகின. இது குறித்து விசாரணையில் இறங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹீமந்தா பிஸ்வா சர்மா, குழந்தைகள் இறப்பிற்கான காரணம் என்னவென்று விசாரிக்க மருத்துவக்குழுவை நியமித்தார். முதல் கட்ட ஆய்வில் குழந்தைகள் போதிய எடையின்மை காரணமாக இறந்ததாக தெரியவந்தது. மேலும் 19 மற்றும் 20 வயது இளம் பெண்கள் குழந்தை பெற்றுள்ளனர். இப்பெண்களுக்கு அவர்களின் உடல் நிலை மகப்பேறு நேரத்தில் போதிய சத்துக் குறைபாடுகளால் குழந்தைகள் இறந்தது தெரிய வந்துள்ளது. மேலும் பிறந்த குழந்தைகள் பலவீனமாக இருந்துள்ளனர். மருத்துவமனையின் அலட்சியமாக குழந்தைகள் இறக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. போதிய வளர்ச்சி இல்லாதது, ஊட்டச்சத்து குறைவான தாய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக மாதம் 60 பச்சிளம் குழந்தைகள் வரை இறந்து வந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.