இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்? தேர்தல் ஆணையம் இன்று மாலை இறுதி விசாரணை: கால அவகாசம் கோரி தினகரன் அணி உச்சநீதிமன்றத்தில் முறையீடு
10/6/2025 2:53:39 PM
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை டெல்லி தேர்தல் ஆணையத்தில் இன்று மாலை நடக்கிறது. இந்த விசாரணைக்கு கால அவகாசம் கோரி டிடிவி.தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உள்கட்சி பிரச்னை பூதாகரமாக வெடித்தது. கட்சிக்கும், ஆட்சிக்கும் யார் பொறுப்பு வகிப்பது என்பதில் அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவியது. ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டது, தனி அணி உருவாக்கியது, சசிகலா சிறைக்கு சென்றது என பல்வேறு மாற்றங்கள் அதிமுகவில் நிகழ்ந்தன.
கட்சிக்கும், சின்னத்துக்கும் உரிமை கோரி ஓபிஎஸ் டெல்லி தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்தார். அதைதொடர்ந்து, தனது ஆதரவு நிர்வாகிகள் உதவியுடன் கட்சிக்கும், சின்னத்துக்கும் உரிமை கோரி பல லட்சம் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார். பதிலுக்கு சசிகலா அணி சார்பிலும் தேர்தல் ஆணையத்திடம் லட்சக்கணக்கில் பிரமாண பத்திரம் வழங்கப்பட்டது. போட்டி, போட்டுக் கொண்டு இருவரும் மனு அளித்ததால் ஒரு கட்டத்தில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் இரட்டை இலை சின்னம் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது அதிமுக புரட்சி தலைவி அம்மா, அதிமுக அம்மா என 2 அணிகளுக்கும் பெயர் வழங்கப்பட்டது. இதற்கிடையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பின் டிடிவி.தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினரை முதல்வர் எடப்பாடி அணியினர் ஓரம்கட்டினர்.
மத்திய அரசு ஆதரவு முழுக்க, முழுக்க முதல்வர் எடப்பாடி அணிக்கு மாறியதால் ஓபிஎஸ் அணி டம்மியாகியது. இருப்பினும் ஓபிஎஸ்சும், முதல்வர் எடப்பாடி அணியும் இணையும் வகையிலான சூழல் உருவாகியது. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் முதல்வர் எடப்பாடி அணியுடன் ஓபிஎஸ் அணி இணைந்தது. ஓபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, சசிகலா குடும்பத்தை முற்றிலும் ஓதுக்கிவிட்டு கட்சியையும், சின்னத்தையும் மீட்க வேண்டும் என முதல்வர் மற்றும் ஓபிஎஸ் அணி கூட்டாக திட்டமிட்டனர். அதன்படி, இரு அணிகள் சார்பிலும் நாங்கள் ஒன்று சேர்ந்துவிட்டோம், எங்களிடம் தான் உண்மையான அதிமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளனர், எனவே எங்களுக்கே இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என முதல்வர் அணி சார்பில் டெல்லி தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், டிடிவி.தினகரன் அணி சார்பிலும் ஆணையத்திடம் இரட்டை இலைக்கு உரிமை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக விவகாரத்தில் இறுதி முடிவு செய்வது குறித்து இரு அணிகளிடமும் ம் தேதி விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முன்னதாக, இறுதியாக எதாவது ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் செப்.29ம் தேதிக்குள் வழங்குமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது. அதன்படி, முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி.தினகரன் அணியினர் போட்டி போட்டுக்கொண்டு ஆவணங்கள் தாக்கல் செய்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் கூடுதல் அவகாசம் கோரிய டிடிவி.தினகரனின் கோரிக்கையை ஆணையம் நிராகரித்தது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இறுதி விசாரணை இந்திய தலைமை தேர்தல் அதிகரி ஏகே.அக்சல் தலைமையில் இன்று மாலை நடக்கிறது.
இதில் முதல்வர், ஓபிஎஸ் அணி தரப்பில் அவர்களின் வக்கீல் டி.எஸ்.வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அசோக்குமார் எம்பி, அமைச்சர்கள் சிவி.சண்முகம், ஜெயக்குமார், உதயகுமார், மனோஜ்பாண்டியன் ஆகியோர் விசாரணையில் கலந்து கொள்கின்றனர். டிடிவி.தினகரன் அணி சார்பில் வக்கீல் ராஜ செந்தூர்பாண்டியன் விசாரணையில் பங்கேற்கிறார். மாலை 3 மணிக்கு விசாரணை தொடங்குகிறது. அப்போது இரு அணிகள் சார்பிலும், கட்சிக்கும், சின்னத்துக்கும் உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளனர். விசாரணைக்குப் பின், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்ந்து முடக்கி வைக்கப்படுமா அல்லது ஆவணங்களின் அடிப்படையில் எதாவது ஒரு அணியினருக்கு ஒதுக்கப்படுமா என்பது தெரியவரும். இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை இன்று மாலை நடக்கிறது. இந்த சூழலில், சின்னம் தொடர்பான விசாரணைக்கு கால அவகாசம் வழங்க கோரி டிடிவி.தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று அவசர, அவசரமாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணைய விசாரணை நடக்க உள்ள நிலையில், அதற்கு முன் உச்சநீதிமன்றம் இதில் ஏதேனும் அவசர உத்தரவு பிறப்பிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் டிடிவி.தினரன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.