தோல்வியை ஒப்புக் கொண்டு ஆட்சியை காங்கிரசிடம் கொடுத்து விடலாம்: மோடிக்கு ராகுல் ஆலோசனை
10/6/2025 2:49:32 PM
அமேதி: பிரதமர் மோடி தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டு பேசாமல் ஆட்சியை காங்கிரசிடம் ஒப்படைத்து விடலாம் என ராகுல் விமர்சித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. பிரதமர் மோடி நாட்டு மக்களின் நேரத்தை வீணடிப்பதை விட்டு விட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரலாம். இந்தியாவை பாதிக்கும் விவகாரங்களில் முடிவு எடுக்க முடியவில்லை என்றால்,தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டு ஆட்சியை காங்கிரசிடம் ஒப்படைத்து விடலாம். காங்கிரஸ் ஆறுமாதத்தில் நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு விடும்.
வருகிற 10ம் தேதி அமித்ஷா, முதல்வர் யோகி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் அமேதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் காங்கிரசின் திட்டங்களாகும். காங்கிரசின் திட்டங்களை பாஜ தலைவர்கள் தொடங்கி வைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ராகுல் குற்றம் சாட்டினார்.