அரசியல் களத்தில் வெற்றிபெற சிவபோக சக்கரத்தில் ஓபிஎஸ் வழிபாடு
9/18/2017 3:55:48 PM
தா.பேட்டை : திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் பழமைவாய்ந்த சிவகாமி சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் சிவாலயம் உள்ளது. மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பு தங்களது ஆயுதங்களை இந்த ஆலயத்தில் அமைந்துள்ள சிவபெருமான் முன்பு வைத்து வணங்கி விட்டு போருக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்ததாகவும், வெற்றி பெற்ற பின் தங்கள் மகுடத்தை திருக்காமேஸ்வரர் முன்பு வைத்து வணங்கி முடிசூடி ஆட்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி ஐஸ்வர்ய மகுடத்துடன் காட்சியளிப்பதால் வேண்டும் செல்வத்தை அளிப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கோயிலுக்கு வந்தார். தாமரை திரியில் ஐந்து விளக்குகள் ஏற்றி தாமரை மலர்கள் சமர்ப்பித்து போகா வடிவமைத்த சிவபோக சக்கரத்தின் கீழ் அமர்ந்து திருக்காமேஸ்வரரை வழிபட்டார். அப்போது அமைச்சர் மா.பா.பாண்டியராஜனும் வழிபாடு செய்தார். பின்னர் ஐஸ்வர்ய மகாலட்சுமி சன்னதியில் அமர்ந்து ஓபிஎஸ் வழிபாடு செய்தார். இதற்கு முன் வெள்ளூர் சிவாலயத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு நடத்திவிட்டு சென்ற சில வாரத்திலே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்ற காரணத்தால் ஓபிஎஸ் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அரசியல் களத்தில் வெற்றி பெறுவதற்காகவே இங்கு வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.