டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி உத்தரவு
9/18/2017 3:42:38 PM
சென்னை : தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் பதவியை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகவும் செயல்பட்டு வந்தனர். இந்தநிலையில் சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திடீரென்று சசிகலா மற்றும் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓரங்கட்டினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தையும் தனது அணியில் இணைத்துக் கொண்டு பொதுக்குழு கூட்டினார். அந்த பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், தினகரனின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் தினகரனுக்கு 21 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் 19 பேர், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும். அவர் ஜெயலலிதா அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்த வில்லை என்று கடிதம் கொடுத்தனர். ஆனால் இது உள்கட்சிப் பிரச்னை என்று கூறி கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரத்தில், அதிமுகவில் 136 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஜெயலலிதா மரணத்தால் ஒரு இடம் காலியாக அறிவிக்கப்பட்டது. இதனால் சபாநாயகரையும் சேர்த்து 135 பேர் அதிமுகவில் உள்ளனர். அதில் தினகரனுக்கு ஆதரவாக 19 பேர் வாபஸ் கடிதம் கொடுத்ததால் அரசு மெஜாரிட்டியை இழந்தது.
அதைத் தொடர்ந்து மேலும் 2 பேர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
இந்தநிலையில் கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்எல்ஏக்கள் கட்சியின் சட்டதிட்ட விதிகளை மீறி விட்டனர். இதனால் அவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அதிமுக சட்டமன்றக் கொறடா ராஜேந்திரன் மனு கொடுத்தார். இந்த மனுவைத் தொடர்ந்து அவர்களிடம் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டார். இதற்கு 19 எம்எல்ஏக்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்கவில்லை. அதற்கு பதில் எம்எல்ஏக்கள் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் வக்கீலுடன் வந்து தங்களுக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்பின் 2வது முறையாக சபாநாயகர் 19 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்பின்னரும் வெற்றிவேல் எம்எல்ஏ மட்டும் வக்கீலுடன் வந்து 19 எம்எல்ஏக்கள் சார்பாக மனு கொடுத்தார். இந்தநிலையில் தினகரன் அணியில் இருந்த எம்எல்ஏ ஜக்கையன் எடப்பாடி அணிக்கு மாறி, சபாநாயகரை நேரில் சந்தித்து தான் அழுத்தத்தின் காரணமாகவே கவர்னிடம் மனு கொடுத்தேன். அந்த மனுவை வாபஸ் வாங்க விரும்புகிறேன் என்று விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மீதம் உள்ள 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த பரபரப்பான நிலையில், அதிமுக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனால், எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்டப்பேரவையில் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னரிடம் 2 முறை திமுக கோரிக்கை விடுத்தது. கவர்னர் நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அப்போது தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ வெற்றிவேல், தங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நாங்கள் முதல்வரை மட்டுமே மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தோம். இது உள்கட்சிப் பிரச்னை. சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறவில்லை. எங்களுக்கு கொறடா உத்தரவே பிறப்பிக்கவில்லை. ஆனால் எங்கள் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து விட்டு மெஜாரிட்டி இழந்த அரசு, பெரும்பான்மையை நிரூக்க திட்டமிட்டுள்ளனர் என்று கூறியிருந்தனர். இந்த மனுவையும் நீதிபதி ஏற்றுக் கொண்டார். பின்னர், வருகிற 20ம் தேதி வரை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கூடாது. இந்த மனு மீது கவர்னர், சட்டப்பேரவை செயலாளர், சபாநாயகர் ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கை 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதனால் வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்தநிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் பூபதி இன்று காலை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்பு சட்டம், 10வது அட்டவணையின் படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின்( கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவை தலைவர் கீழ்காணும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்களை 18.09.2025 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற பதவியை இழந்துவிட்டார்கள். அதன் விபரம் வருமாறு: தங்க தமிழ்செல்வன்(ஆண்டிபட்டி) ஆர்.முருகன்(அரூர்), மாரியப்பன் கென்னடி(மானாமதுரை), கதிர்காமு(பெரியகுளம்), ஜெயந்தி பத்மநாபன்(குடியாத்தம்), பழனியப்பன்(பாப்பிரெட்டிபட்டி), செந்தில்பாலாஜி(அரவக்குறிச்சி), டாக்டர் எஸ்.முத்தையா(பரமக்குடி), வெற்றிவேல்(பெரம்பூர்), பார்த்திபன்(சோளிங்கர்), கோதண்டபாணி(திருப்போரூர்), டி.ஏ.ஏழுமலை(பூந்தமல்லி), ரெங்கசாமி(தஞ்சாவூர்), தங்கதுரை(நிலக்கோட்டை), பாலசுப்பிரமணி(ஆம்பூர்), எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன்(சாத்தூர்), சுந்தரராஜ்(ஓட்டபிடாரம்), உமா மகேஸ்வரி(விளாத்திகுளம்)இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.