பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா?
9/17/2017 2:44:46 PM
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகிறார். அவர் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு சட்டசபை கூடும் தேதியை அறிவித்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிடுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி கவர்னருக்கு தனி,தனியாக கடிதம் அளித்தனர். இதனால் எடப்பாடி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 114 ஆக குறைந்தது. இதனால் எடப்பாடி அரசை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி கவர்னரை சந்தித்து எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு அளித்தனர். ஆனால் கவர்னர் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தார். இதனால் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி அரசு பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடுமாறு வலியுறுத்தினர்.
அதன்பிறகும், சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு கவர்னர் உத்தரவிடாததால் திமுக சார்பிலும், தினகரன் தரப்பிலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே முதல்வர் அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற டிடிவி.தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதில் ஜக்கையன் சபாநாயகரிடம் அளித்த விளக்கம் ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சபாநாயகர் நோட்டீஸிற்கு உரிய விளக்கம் அளிக்காத 18 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வழக்கு நிலுவையில் இருப்பதால் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை 20ம் தேதி வரை சபாநாயகர் தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார். அவர் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சட்டசபை கூடும் தேதியை அறிவித்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிடுவார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சட்ட
சபையில் பலப்பரீட்சையை சந்திக்க, திமுக கூட்டணி கட்சிகளும், தினகரன் அணியினரும் தயாராகி வருகின்றனர். இதனால், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.