நெல்லை அருகே அதிகாலை கோர விபத்து பஸ் மீது லாரி மோதல் 5 பேர் பரிதாப சாவு: சோகத்தில் முடிந்த ஆன்மீக பயணம்
9/16/2017 3:08:36 PM
நெல்லை: நெல்லை அருகே ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த பக்தர்கள் பஸ் மீது சிமென்ட் பாரம் ஏற்றிய லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், தெனாலி பகுதியைச் சேர்ந்த 47 பக்தர்கள், 2 சமையல் தொழிலாளிகள் மற்றும் 2 டிரைவர்கள் என மொத்தம் 51 பேர் ஒரு சுற்றுலா பஸ்சில் ஆன்மீக சுற்றுலாவாக கடந்த 14ம் தேதி இரவு அங்கிருந்து புறப்பட்டனர்.ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு சென்ற அவர்கள் கன்னியாகுமரிக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லையை கடந்து சென்று கொண்டிருந்தனர்.
டக்கரம்மாள்புரத்தை கடந்து நாகர்கோவில் சாலையில் அரசு ஐஆர்டி பாலிடெக்னிக்கை கடந்து சிறிது தூரம் சென்றதும் இயற்கை உபாதையை கழிப்பதற்காக டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். சிலர் பஸ்சை விட்டு இறங்கி நின்றனர். பலர் பஸ்சுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது திண்டுக்கல்லில் இருந்து மார்த்தாண்டத்திற்கு சிமென்ட் பாரம் ஏற்றிய லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. லாரியை கோவில்பட்டி இலுப்பையூரணியைச் சேர்ந்த ரசூல்ராஜா என்பவர் ஓட்டினார்.இருளில் சுற்றுலா பஸ்சும், அதிலிருந்த பயணிகள் சாலையோரமாக நின்றதையும் கடைசியாக கவனித்த லாரி டிரைவர் நிலை தடுமாறினார். இதனால் லாரி அவர்கள் மீது மோதியதுடன் சுற்றுலா பஸ் மீதும் மோதியது. இதில் பஸ்சின் பின்பகுதி நொறுங்கியது.
மேலும் சாலையில் நின்றிருந்த தெனாலி அருகே உள்ள அனந்தவீரம் என்ற பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமாலிக் மனைவி வர்த்தினி (56), நாகரத்தினம் (45) ஆகிய 2 பெண்களும், யூப்புர் பகுதியைச் சேர்ந்த மருந்துக்கடை அதிபர் வெங்கட்ராம்ராவ் (66), விவசாயி ராம்மோகன்ராவ் (70) ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.மேலும் சத்தியம் (50) உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பியோடி விட்டார்.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்த 7 பேரையும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்தில் சத்தியம் என்பவர் பரிதாபமாக இறந்தார்.
உயிர் தப்பியவர் கண்ணீர் பேட்டி
விபத்தில் உயிர் தப்பிய ராமுலு என்பவர் கூறியதாவது, 4 சிறுவர்கள் உள்பட 51 பேர் ஆன்மீக சுற்றுலாவாக கடந்த 14ம் தேதி இரவு தெனாலியிலிருந்து புறப்பட்டோம். காளகஸ்தி, காவிரி புஷ்கரணி, பழநி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். குமரியில் சூரியோதயம் பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்.அதிகாலை 4.30 மணிக்கு பஸ்சை நிறுத்தி இயற்கை உபாதையை கழிப்பதற்காக சிலர் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தோம். அப்போது வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீதும், பஸ்சின் மீதும் மோதியது.
அந்தப் பகுதி இருளாக இருந்ததால் பதற்றத்தில் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். மீட்பு வாகனங்கள் வந்து பார்த்த பின்னர் தான் 4 பேர் இறந்தது தெரியவந்தது. இந்த சோகத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பது தெரியவில்லை. நாங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல அரசும், அதிகாரிகளும் உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.