பீட்டர் அல்போன்ஸ் எழுச்சியுரை: மோடியின் புதிய இந்தியா தமிழகத்துக்கு வேண்டாம்: இரா.மனோகர் அறிக்கை
9/15/2017 5:25:58 PM
சென்னை: இரா.மனோகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெல்லத் தமிழினிச் சாகும்- அந்த மேற்கு மொழிகள் புவியிசையோங்கும்’ என்று பேசிய நீலகண்ட சாஸ்திரிகளை பேதை என்று கடிந்துரைத்த பாரதி, இந்த புவி மீது தமிழ் என்றும் நிலைத்திருக்கும் என்றான். ஆனால் இன்றோ இதற்கு நேர்மாறாக தமிழுக்கும் சோதனை தமிழனுக்கும் வேதனை, தமிழ் சிம்மாசனத்தில் சமஸ்கிருதமும், ஹிந்தியும் ஏறி அமர பார்க்கின்றன. மாநில ஆட்சியாளர்களோ மறைமுகமாகக் கூட இதை எதிர்க்க வழியின்றி, வகையின்றி, வார்த்தையின்றி, வருமான வரி சோதனை ஆயுதத்தை கண்டு அடங்கி போய் கிடக்கிறார்கள். தமிழகன் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இழந்தான்.
முப்போகம் விளைவிக்கும் தஞ்சை மண்ணில் ஒரு போகம் விளைவிக்கவும் வழியின்றி எம் தமிழ் விவசாயி தலைநகரில் நிர்வாணக் கோலத்தில் நிற்கின்றான். எதை உண்ண வேண்டும், எதை கற்க வேண்டும் என்று தமிழனுக்கு தலைநகரில் இருந்து உத்தரவு வருகிறது. கைநாட்டு வைத்தவன் பிள்ளை, மருத்துவம் கற்க வேண்டும் என்று நீட்டாகச் சொன்ன பெருந்தலைவர் காமராஜரை புறக்கணித்துவிட்டு, நீட் தேர்வை நிர்பந்திக்கிறது நெடுவாசலில் நமக்கு குழிதோண்டிய மேதாவிகள் கூட்டம். அமிழ்தினும் இனிய தமிழ் பேசும் தமிழர் உரிமைக்காக இன்னும் எத்தனை அனிதாக்களை தூக்கிலிடப்போகிறோம்.
தமிழனே, கடந்த கால போராட்டங்களை நினைவு கூறாதவருக்கு நிகழ்காலம் இல்லை. நிகழ்காலத்தில் போராடாதவருக்கு எதிர்காலம் இல்லை என்பதை மனதில் வை. இதனை உணர்த்தும் விதமாக வரும் 22ம்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மண அளவில் சென்னை, எண்.54, ராஜாஜி சாலையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு பயிலரங்கத்தில், ‘மோடியின் புதிய இந்தியா தமிழகத்திற்கு வேண்டாம்’ என்ற தலைப்பில் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், மக்கள் விரோத கொள்கையில் ஈடுபடும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எழுச்சியுரையாற்றுகின்றார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.