5 கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு: டிஎஸ்பி காதர் பாட்ஷாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க மனு
9/15/2017 5:22:25 PM
சென்னை: டிஎஸ்பி காதர் பாட்ஷாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ஆலடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்யராஜ் என்பவர் கடந்த 2008ல் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார். அப்போது, 6 பழங்கால சிலைகள் கிடைத்தன. ரூ.20 கோடி மதிப்பிலான இந்த சிலைகளை தாசில்தாரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து ஆரோக்கியராஜ் வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய முயன்றார்.
இது குறித்து தவகல் அறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த காதர் பாட்ஷா, தலைமை காவலர் சுப்புராஜ் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.
இந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் ரூ.25 லட்சத்திற்கு விற்று, அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், 2016ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை சிலை கடத்தல் தடு ப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கைது ெசய்தனர். பின்னர் தீனதயாளன் யார் யார் மூலம் சிலைகளை வாங்கினர் என்ற பட்டியலை பெற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணையில் தீனதயாளன் அளித்த பட்டியலில் காதர் பாட்ஷா, சுப்ராஜ் அகியோர் பெயர்கள் இருந்தது. காதர் பாட்ஷா உடனடியாக தலைமறைவானார். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த டிஎஸ்பி போலீசார் காதர்பாட்ஷாவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 27ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட காதர்பாட்ஷாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்த தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறும் போது, காதர் பாட்ஷாவுக்கு சர்வதேச சிலை கடத்தல் கும்பல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அதாவது, சுபாஷ்கபூர், தீனதயாளன் உட்பட 5 சிலை கடத்தல் கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களின் கடத்தல் செயல்பாடுகளில் காதர்பாட்ஷாவுக்கு முக்கிய பங்கு இருந்துள்ளது. எனவே, இவரை விசாரித்தால் பல்வேறு தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது. எனவே, அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.