ஸ்டிரைக் நோட்டீஸ் எதிரொலி: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை
9/15/2017 5:15:11 PM
சென்னை: ஸ்டிரைக் எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்ளுடன் அரசு வரும் 19ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அவர்களை தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கடந்த 31.12.2024 அன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு 13வது ஊதியம் ஒப்பந்தம் அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் அரசு இன்னும் ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தவில்லை.
இதுதொடர்பான, பேச்சுவார்த்தை 2016ல் தொடங்கி இதுவரை 16 முறை நடந்து முடிந்துவிட்டது. பல முறை துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்(எம்டிசி) நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அரசு துணை கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டியுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டவில்லை. ஒவ்வொரு முறை பேசும்போதும் அதிகாரிகள், தங்கள் கோரிக்கைகளை அமைச்சர் மற்றும் அரசிடம் எடுத்து கூறி நல்ல முடிவு அறிவிப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கூறுகின்றனர்.
ஆனால், இதுவரை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை நிறைவேற்றவில்லை.
குறிப்பாக, ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணபலன்களை பிடித்தம் செய்த வகையில் அரசு சுமார் ரூ.5,000 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ளது. இந்த தொகையை முழுவதும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதிகாரிகள், குறைவான தொகையில் படிப்படியாக விடுவிப்பதாக தெரிவிக்கின்றனர். தொழிற்சங்கங்கள் அதை ஏற்கவில்லை. இதற்கிடையில், கடந்த வாரம் மீண்டும் துணை கமிட்டி அதிகாரிகள் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் சுமூக முடிவு எட்டப்படாததால், மீண்டும் ஸ்டிரைக்கில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன. அதன்படி, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், பிடிஎஸ் உள்பட 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 9ம் தேதி, போக்குவரத்து முதன்மை செயலாளரிடம் ஸ்டிரைக் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அதில், தங்கள் நடவடிக்கையில் திருப்தி இல்லாததால் செப்.24ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்’’ என தெரிவித்திருந்தனர். இதனால் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. ஏற்கனவே, ஸ்டிரைக் நடந்தபோது தமிழகம் முழுவதும் 90 சதவீத பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும், போக்குவரத்து கழகத்துக்கும் பயங்கர நஷ்டம் ஏற்பட்டது. ஏற்கனவே, நாள்தோறும் ரூ.8 கோடி நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே, மீண்டும் ஸ்டிரைக் நடந்தால் அதி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அதை தடுக்க அரசு முயற்சித்து வருகிறது. அதன்படி, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி அன்று சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில், சுமூகமுடிவு ஏற்படாவிட்டால் திட்டமிட்டப்படி ஸ்டிரைக் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.