109வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை: திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
9/15/2017 4:34:11 PM
சென்னை: அண்ணாவின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா பிறந்தநாள் விழா திமுக சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அண்ணா சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சிலை அருகில் அண்ணாவின் திருஉருவ படம் வைக்கப்பட்டு மாலைகள் போடப்பட்டிருந்தன. காலை 9.30 மணி அளவில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தனர். பின்னர், இருவரும் அண்ணா சிலை மற்றும் அவரது உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைதொடர்ந்து, திமுகவின் பிற நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில், முதன்மை செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்பி, துணை பொதுச்செயலாளர் விபி.துரைசாமி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ.இளங்கோவன், ஆற்காடு வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ரங்கநாதன்,
கே.எஸ்.ரவிச்சந்திரன், கு.க.செல்வம், பிடிஆர்.தியாகராஜன், தாயகம் கவி, ஆர்.டி.அரசு, சிம்லா முத்துசோழன், பகுதி செயலாளர்கள் அகஸ்டின்பாபு, அன்புதுரை, ராமலிங்கம், நந்தனம் மதி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகர்ராஜா, சிற்றரசு, ஈரோடு இறைவன், மாணவர் அணி துணை செயலாளர் மோகன், எல்.பலராமன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, தொமுச சார்பில் பேரவை சுப்புராமன், பொதுச்செயலாளர் சண்முகம், நடராஜன், சிங்கார ரத்தினசபாபதி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றனர்.