அரசு வேலை வாங்கி தருவதாக 1.08 கோடி மோசடி: பெண் அதிகாரி உள்பட 3 பேர் கைது
9/14/2017 3:53:27 PM
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன்நகரை சேர்ந்தவர் தமிழரசி (47). இவர், சேலம் டவுன் உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடன், இடைப்பாடி ஆலச்சிபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் (48), புரோக்கரான ராமன்நகர் நடராஜன் (62), வீரக்கல் பேரூராட்சி முன்னாள் தலைவரான பாமக பிரமுகர் தமிழ்வாணன் (35) ஆகியோர் சேர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு தங்களுக்கு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தெரியும் எனக்கூறி, அரசு பள்ளி ஆய்வகங்களில் உதவியாளர் பணி வாங்கி தருவதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பி ராமன்நகரை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், தமிழரசியிடம் பணம் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்து நீண்டநாட்களாகியும் வேலை கிடைக்காததால், 12 பேர் தாங்கள் செலுத்திய ₹1.08 கோடியை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் அவர், பணத்தை தராமல் இழுத்தடித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, ராமன்நகர் சிவராஜ் (32) தலைமையில் 12 பேர் மாவட்ட எஸ்பி ராஜனிடம் புகார் மனு அளித்தனர். இதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, தமிழரசி, நடராஜன், ஆறுமுகம் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.