லண்டன் பெண்ணிடம் 12 லட்சம் : சாமியாரை பிடிக்க தனிப்படை அமைப்பு
9/14/2017 3:50:51 PM
சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள புலியூர் காட்டுசாகையை சேர்ந்த கலியமூர்த்தி மகள் ஜெயப்பிரியா (25). இவர் லண்டனில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஜெயப்பிரியா பெற்றோருடன் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் உள்ள கருப்பசாமி கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு குறிசொல்லி வரும் சாமியார் ஆறுமுகத்தை சந்தித்து தனது குடும்பத்தின் சிரமத்தையும், தனக்கு திருமணம் ஆகாமல் தள்ளிப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர்களிடம் பேசிய சாமியார் ஆறுமுகம், உங்களுக்கு தோஷம் இருக்கிறது. நீங்கள் பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்று தெரிவித்து ஜெயப்பிரியாவின் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டார். பின்பு ஜெயப்பரியா லண்டன் சென்றார்.
சில நாட்களுக்கு பிறகு ஜெயப்பிரியாவை தொடர்பு கொண்ட சாமியார் ஆறுமுகம் பரிகாரம் செய்ய இருப்பதால் தனது வங்கி கணக்கிற்கு ₹10 ஆயிரம் பணத்தை அனுப்ப சொன்னார். சாமியார் மீது நம்பிக்கை வைத்த ஜெயப்பிரியா உடனடியாக அவர் கேட்ட பணத்தை அனுப்பி இருக்கிறார். பின்பு பல தவணைகளில் மூன்று லட்சம், இரண்டு லட்சம் என மொத்தம் ₹12 லட்சம் வரை லண்டனில் இருந்து அனுப்பி இருக்கிறார் ஜெயப்பிரியா.ஒரு கட்டத்தில் சாமியார் ஆறுமுகம் பணம் பறிப்பதையே குறிக்கோளாக இருக்கிறார் என்பதை அறிந்த அவர் ஆன் லைன் மூலம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் செய்தார்.இதனை தொடர்ந்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயப்பிரியாவின் உறவினரும், தவாக மாவட்ட செயலாளருமான பரங்கிப்பேட்டை சேந்திரக்கிள்ளையை சேர்ந்த முடிவண்ணன் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் ெசய்தார்.அதில் தனது உறவினர் ஜெயப்பிரியாவிடம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் அருள்வாக்கு சொல்லி வரும் ஆறுமுகம் பல தவணைகளில் வாங்கியிருக்கும் ₹12 லட்சம் பணத்தை கேட்க சென்றபோது ஆட்களை வைத்து மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் பண மோசடி வழக்கு பதிவு செய்து சாமியார் ஆறுமுகத்தை வலைவீசி தேடிவருகிறார்கள். தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.