மீஞ்சூர் அருகே துணிகரம் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை: பெண்ணிடம் 5 பவுன் வழிப்பறி
9/5/2025 3:42:24 PM
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி (35). விவசாயி. இவர், நேற்று பொன்னேரியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, 35 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மேமீரான் (34). இவர், நேற்று பொன்னேரியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.மீஞ்சூர் பிரபு நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி பாரதி (40). இவர், நேற்று இரவு மீஞ்சூர் பஜாருக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த ஆசாமிகள் 2 பேர், பாரதி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டார்.
இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகார்கள் அடிப்படையில், மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மீஞ்சூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.