யு.எஸ்.ஓபன் டென்னிஸ் 4ம் சுற்றில் மரியா ஷரபோவா தோல்வி: கால் இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், கிவிட்டோவா
9/4/2025 4:04:52 PM
நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடர், நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த, மகளிர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்றில், ரஷ்யாவின் மரியா ஷரபோவா-தொடரின் 16ம் நிலை வீராங்கனையான லாத்வியாவின் அனஸ்டாசிஜா செவஸ்டோவா மோதினர். இதில், 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில், அனஸ்டாசிஜா செவஸ்டோவா வெற்றி பெற்றார். 27 வயதாகும் அனஸ்டாசிஜா செவஸ்டோவா, கால் இறுதி சுற்றில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார். ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 4ம் சுற்றில், ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸை, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, முதல் முறையாக கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெலடோனியம் ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் விதிக்கப்பட்ட 15 மாத தடைக்காலம் முடிந்த பிறகு, அதாவது 18 மாத அளவில், மரியா ஷரபோவா பங்கேற்ற முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் யு.எஸ்.ஓபன்தான் என்பதால், அவர் விளையாடும் போட்டிகளின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அதற்கு ஏற்றாற்போல் விளையாடி வந்த மரியா ஷரபோவாவின் வசீகரமான யு.எஸ்.ஓபன் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. உலகின் 2ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், டிமியா பாபோஸ், சோபியா கெனின் ஆகியோரை வீழ்த்தி, 4ம் சுற்றுக்கு மரியா ஷரபோவா முன்னேறியிருந்தார். மற்றொரு 4ம் சுற்று போட்டியில், தொடரின் 9ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்-ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் 35ம் நிலை வீராங்கனையான கார்லா சுவாசரஸ் நவோரா மோதினர். இதில், 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். யு.எஸ்.ஓபனில், கடந்த 3 ஆண்டுகளில் 2வது முறையாக, வீனஸ் வில்லியம்ஸ் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஒற்றையர் பிரிவில் எஞ்சியிருக்கும், மூத்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் மட்டும்தான். அவருக்கு 37 வயதாகிறது. 2000, 2001ம் ஆண்டுகளில் யு.எஸ்.ஓபன் உள்பட மொத்தம் 7 முறை கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மற்றொரு 4ம் சுற்று போட்டியில், தொடரின் 13ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா-தொடரின் 3ம் நிலை வீராங்கனையான ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருசா மோதினர். இதில், 7-6, 6-3 என்ற செட் கணக்கில், பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று, 2வது முறையாக யு.எஸ்.ஓபன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் அவர், வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொள்கிறார்.
பெருமை கொள்கிறேன்
தோல்வியடைந்து வெளியேறிய மரியா ஷரபோவா கூறுகையில், ‘’நம்ப முடியாத வகையில் கிடைத்த வாய்ப்பின் மூலம் யு.எஸ்.ஓபனில் விளையாடினேன் (உலகின் 146வது நிலையில் உள்ள மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு மூலம் அனுமதி வழங்கப்பட்டது). கடந்த ஒரு வாரமாக எனது பயணம் சிறப்பானதாக இருந்தது. இதில் இருந்து பல நல்ல விஷயங்களை நான் எடுத்து கொள்ள முடியும். என்னால் முடிந்தவரை நன்றாக விளையாடினேன். அதை நினைத்து பெருமை கொள்கிறேன்’’ என்றார்.