யு.எஸ்.ஓபன் டென்னிஸ் மரியா ஷரபோவா 3ம் சுற்றுக்கு தகுதி
8/31/2017 4:05:55 PM
நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, யு.எஸ்.ஓபன் டென்னிஸ் ெதாடர், நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த, மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று போட்டி ஒன்றில், ரஷ்யாவின் மரியா ஷரபோவா-59ம் நிலை வீராங்கனையான ஹங்கேரியின் டிமியா பாபோஸ் பலப்பரீட்சை நடத்தினர். உலகின் 2ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை, முதல் சுற்றில் மரியா ஷரபோவா வீழ்த்தியிருந்தார். மெலடோனியம் ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் விதிக்கப்பட்ட 15 மாத தடை காலம் முடிந்த பிறகு, மரியா ஷரபோவா பங்கேற்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் யு.எஸ்.ஓபன்தான் என்பதால், அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியின் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்றும் சிறப்பாக விளையாடிய மரியா ஷரபோவா, 6-7 (4-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில், டிமியா பாபோஸை வீழ்த்தி, 3ம் சுற்றுக்கு முன்னேறினார். தற்போது தரவரிசையில் 146வது இடத்தில் உள்ள மரியா ஷரபோவா, வைல்டு கார்டு என்ற சிறப்பு அனுமதியின் மூலம், பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சுற்றை போல், இன்றும் அவர் களமிறங்கியபோது, மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள், உற்சாக குரல் எழுப்பி ஆதரவளித்தனர். 2006ம் ஆண்டு யு.எஸ்.ஓபன் சாம்பியனான மரியா ஷரபோவா, 3ம் சுற்றில், அமெரிக்காவின் வைல்டு கார்டு வீராங்கனை சோபியா கெனினை எதிர்கொள்கிறார். மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று போட்டி ஒன்றில், 37 வயதாகும் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்-20 வயதாகும் பிரான்சின் ஒசேன் டோடின் பலப்பரீட்சை நடத்தினர். இதில், 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று, 3ம் சுற்றுக்கு முன்னேறினார். 3ம் சுற்றில், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியை அவர் எதிர்கொள்கிறார்.
அலெக்சாண்டர் ஸ்வெர்வ் தோல்வி
யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரில் நாள்தோறும் அதிர்ச்சி தோல்விகள் அரங்கேறி வருகின்றன. முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக கருதப்பட்ட பிரிட்டனின் ஜோஹன்னா கோண்டா, நடப்பு சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர். இந்த வரிசையில் இன்றும் ஒரு அதிர்ச்சி தோல்வி அரங்கேறியது. ஜெர்மனியை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வ். நடப்பு தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளவர்களில், 3வது நபராக கருதப்பட்டவர். தொடரின் 4ம் நிலை வீரரான அவர், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில், குரோஷியாவின் போர்னோ கோரிக்குடன் இன்று காலை மோதினார். இதில், 3-6, 7-5, 7-6 (1), 7-6 (4) என்ற செட் கணக்கில், போர்னோ கோரிக் போராடி வென்றார்.