டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு? சட்ட வல்லுனர்களுடன் சபாநாயகர் ஆலோசனை
8/25/2017 3:19:20 PM
சென்னை: முதல்வருக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்எல்ஏக்களின் பதவி பறிப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடி அணியுடன் ஓபிஎஸ் அணி இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுங்கட்சியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அவரிடம், முதல்வர் எடப்பாடி மீது நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம். முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குகிறோம் என்று தனித்தனியே கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது. அதனால், உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தலைமை கொறடா ராஜேந்திரன் “முதல்வருக்கு எதிராக கவர்னரிடம் மனுக்கொடுத்த 19 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் நேற்று மனு அளித்தார்.
மனு கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் சபாநாயகர் தனபால் “19 எம்எல்ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதில், “கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஒரு வாரத்தில் இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார். சபாநாயகர் விதித்த கெடுவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதற்குள் அவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே வாய்ப்பு அளித்தாலும் சட்டவிதிகளை மீறவில்லை. கொறடா உத்தரவை மீறவில்லை என்று மட்டுமே விளக்கம் அளிப்பார்கள்.
இதனால், டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்எல்ஏக்களை டிஸ்மிஸ் செய்ய சபாநாயகர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்கள் பதவி பறிக்கப்பட்டால் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். இதே போல, பெங்களூர், அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற போது ேகார்ட்டு தான் செல்ல நேரிட்டது. கடைசியில் அவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்று தான் வெற்றி முடிந்தது. கோர்ட்டுக்கு சென்றால் காலதாமதம் ஏற்படும். முதலில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும். அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும். அதற்கு குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு மேல் ஆகும். எனவே, எம்எல்ஏக்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட சில நாட்களில் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, எடப்பாடி அணிக்கு 112 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுகவு அணிக்கு 98 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். இதனால், பெரும்பான்மையை நிருபிப்பதில் எந்தவித சிக்கலும் அரசுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்று எடப்பாடி தரப்பு கருதுகிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை அரசை பிரச்னை இல்லாமல் நடத்தலாம். அதன் பிறகு தீர்ப்பு வந்தால் பார்த்து கொள்ளலாம் என்று அரசு கருதுகிறது. இதனால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.