குடியாத்தம் அருகே டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களை மிரட்டி மதுபானம் வாங்கிய போலீஸ் ஏட்டு உட்பட 7 பேர் கைது
8/23/2017 3:59:50 PM
குடியாத்தம்: சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(48). புழல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். கடந்த ஓராண்டாக பணிக்கு செல்லவில்லையாம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(46). நண்பர்கள். நேற்று முன்தினம் பிரபாகரன் தனது நண்பர்களான சென்னை ஆவடியை சேர்ந்த செந்தில்குமார்(39), பட்டாபிராமை சேர்ந்த குருமூர்த்தி(35), அருள்ராஜ்(36) கொடுங்கையூரை சேர்ந்த கமல்ராஜ்(47), சவுகார்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன்(55) ஆகிய 5 பேர் குடியாத்தம் பரதராமியில் உள்ள ரவியை பார்க்க காரில் வந்தனர்.
பின்னர் அவர்கள் பரதராமி வி.எஸ்.புரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று போலீஸ் அதிகாரி வந்துள்ளார். அவருக்கு மதுபானம் வேண்டும் என மிரட்டி ரூ.540 மதிப்பிலான 4 குவார்ட்டர் பாட்டில்களும், பெருமாள் பள்ளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியரை மிரட்டி ரூ.800 மதிப்பிலான 2 புல் பாட்டில்களும் வாங்கி சென்றனர். இதனால் சந்தேகமடைந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள், பரதராமி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கார்த்திகேயன், செந்தில்குமார், குருமூர்த்தி, கமல்ராஜ், அருள்ராஜ், ரவி, போலீஸ் ஏட்டு பிரபாகரன் ஆகிய 7 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் மீது போலீசார் நேற்று வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.