திருப்போரூர் அருகே தையூரில் போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலத்தை அபகரித்து பிளாட் போட்டு விற்பனை: ஒருவர் கைது
8/23/2017 3:53:11 PM
காஞ்சிபுரம்: ஆள்மாறாட்டம் செய்து 5 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்து பிளாட் போட்டு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் அதே கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை விஜயலட்சுமிக்கு தெரியாமலேயே வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளனர். இடத்தை பார்க்க சென்றபோது அந்த இடத்தில் பிளாட்போட்டு இருப்பது தெரியவந்து விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது தையூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இந்த நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
மேலும் நிலத்துக்கு ஆள் மாறாட்டம் செய்து, விஜயலட்சுமியின் பெயரில் இருந்த அந்த நிலம் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. இதுகுறித்து காஞ்சிபுரம் நில அபகரிப்பு பிரிவு போலீசில் விஜயலட்சுமி புகார் தெரிவித்தார். இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்து விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.