மீஞ்சூர் அருகே வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை: ரூ.40 ஆயிரம் அபேஸ்
8/16/2017 4:20:05 PM
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டூர் அருகே வாயலூர் குப்பத்தை சேர்ந்தவர் நரேந்திர ரத்தினம் (32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சதா. தனது மனைவியின் முதல் பிரசவத்துக்காக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதித்தார். அவருடன் அங்கேயே தங்கியிருந்து நரேந்திர ரத்தினம் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் நரேந்திர ரத்தினம் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதில் நரேந்திர ரத்தினம் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டு பீரோ உடைந்து, அதில் வைத்திருந்த துணிமணி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது நரேந்திர ரத்தினத்துக்கு தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசில் நரேந்திர ரத்தினம் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.