ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர்
8/14/2017 3:32:39 PM
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18ம் தேதி நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் எழுந்தருளி காவிரித்தாய்க்கு ஆற்றில் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு ஆடி 18 அன்று பெரிய பெருமாளுக்கு சாத்தப்பட்ட தைலக்காப்பு அகற்றப்படாமல் இருந்ததால், ஆடி 28ம் தேதியான நேற்று மாலை நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். அப்போது மழை லேசாக தூறிக் கொண்டு இருந்ததால் நம்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கவிலாச மண்டபத்தில் இருந்தவாறு வழி நடை உபயங்கள் கண்டருளினார். 11.30க்கு அங்கிருந்து புறப்பட்டு அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.
அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 4 வரை அங்கு இருந்தவாறு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். 4.45 மணிக்கு பட்டுச்சேலை, பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை யானை ஆண்டாள் மீது வைத்து நம்பெருமாள் காவிரி ஆற்றில் விட்டு, காவிரித்தாய்க்கு சீர்வரிசை அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9.30க்கு நம்பெருமாள் அம்மாமண்டபத்தில் இருந்து புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 10.30க்கு மூலஸ்தானம் சென்ற டைந்தார்.