கார் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்: தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்
8/14/2017 3:12:54 PM
அம்பத்தூர்: சென்னை வியாசர்பாடி, பி.வி.காலனி 28-வது தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (34). கார் டிரைவர். இவர் ஒரு தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் ஆன்லைன் புக்கிங்கில் வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சவாரி முடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை சாகுல் ஹமீதை எழுப்பி, ‘மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், காரை எடுங்கள்’ என்று 3 பேர் கும்பல் கூறினர். இதற்கு சாகுல் ஹமீது எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை 3 பேரும் மிரட்டி காரை எடுக்க வைத்தனர்.
பின்னர் கொளத்தூர் அருகே சாகுல் ஹமீதை சரமாரியாக தாக்கி, காரின் பின்சீட்டில் படுக்க வைத்தனர். அவர்களில் ஒருவன் காரை ஓட்டினான். அம்பத்தூர் சிடிஎச் சாலை, திருவேங்கடம் நகர் அருகே கார் வந்தபோது, சாகுல் ஹமீதிடம் இருந்து ₹2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 செல்போன்களை அக்கும்பல் பறித்தது. பின்னர் அவரை ஓடும் காரிலிருந்து அக்கும்பல் கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றது. அக்கம்பக்கத்தினர் சாகுல் ஹமீதை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சாகுல் ஹமீது புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தப்பட்ட காரின் பதிவெண்ணை வைத்து, சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறை மூலமாக, அம்பத்தூரை சுற்றியுள்ள திருவேற்காடு, மதுரவாயல், திருமங்கலம், கொரட்டூர், ராஜமங்கலம், திருமுல்லைவாயல், ஆவடி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், திருவேற்காடு பகுதியில் நேற்று காலை 10.30 மணியளவில் சாலையோரமாக நின்றிருந்த காரில் ஒரு பெண்ணும் 3 வாலிபர்களும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அவ்வழியாக வந்த ரோந்து போலீசார், அங்கு காரின் அருகே சந்தேக நிலையில் நின்றிருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்களிடம் காருக்கு உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர்கள் ‘எங்களிடம் காருக்கான ஆவணம் இல்லை’ எனக் கூறியதால், அப்பெண் உட்பட 4 பேரையும் திருவேற்காடு காவல் நிலையம் கொண்டுவந்து ஒப்படைத்தனர். இதையடுத்து அப்பெண்ணிடம் காவல்நிலைய போலீசார் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பினர். மீதியுள்ள 3 வாலிபர்கள் குடிபோதையில் இருந்ததால், அவர்கள்மீது சந்தேக கேஸ் பதிவு செய்துவிட்டு, அவர்களையும் வெளியே அனுப்பியுள்ளனர்.
அதன்பிறகுதான் அந்த கார் சாகுல் ஹமீதை தாக்கி கடத்தப்பட்டது திருவேற்காடு போலீசாருக்குத் தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்து, அந்த காரை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். கடத்தப்பட்ட கார் குறித்து அதிகாலை நேரத்தில் வயர்லெஸ் மைக் மூலமாக அனைத்து காவல் நிலையங்களுக்கு தகவல் தெரியப்படுத்தியும், திருவேற்காடு போலீசாரின் கவனக்குறைவால் காரை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை கோட்டை விட்டது. போலீசாருக்கு இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால்தான் கார் கடத்தல் கும்பலை போலீசார் தப்பிக்க விட்டுள்ளனர் என போலீசார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.