இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால் அன்சாரி வேறு நாட்டுக்கு செல்லலாம்
8/14/2017 2:54:32 PM
புதுடெல்லி,: இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால் அன்சாரி வேறு நாட்டுக்கு செல்லலாம் என ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வந்த ஹமீத் அன்சாரி கடந்த 10ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். 10 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார். அண்மையில் ஹமீத் அன்சாரி ஒரு விழாவில் பேசுகையில், இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சிறுபான்மையினர் நினைக்கின்றனர் என்றார். இதற்கு பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி, வெங்கய்யா நாயுடு ஆகியோர் ஹமீத் அன்சாரி பேச்சை விமர்சித்திருந்தனர்.
இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஹமீத் அன்சாரி கருதுகிறார். அன்சாரி போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு மிக்க ஒரு நாட்டின் பெயரை தெரிவிக்கலாம். தேவைப்பட்டால் ஹமீத் அன்சாரி போன்றவர்கள் அங்கு சென்று வாழலாம். அன்சாரி பேச்சுக்கு ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை.முஸ்லிம் மக்களிலேயே ஏராளமானோர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
துணை ஜனாதிபதியாக பதவி வகித்த போது மதசார்பற்றவராக இருந்த ஹமீத் அன்சாரி தற்போது தீவிர மதவாதியாக மாறிவிட்டார் என்று தாக்கினார். ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.