தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
7/14/2017 3:44:27 PM
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் 50 ஆண்டு பொது வாழ்வு பொன்விழா மற்றும் 40 ஆண்டு சட்டமன்ற, நாடாளுமன்ற பணிகள் பாராட்டு விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமை வகித்தார். விழா குழு தலைவர் விஸ்வநாதன் வரவேற்பு உரையாற்றினார்.
திருநாவுக்கரசர் பொன்விழா சிறப்பு மலர் மற்றும் நூல்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெற்று கொண்டார். மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்எஸ் திரவியம், சிவ ராஜசேகரன், ரூபி மனோகரன், வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் கி.வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன், காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, என்.ஆர்.தனபாலன், ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, ஜெயக்குமார், கே.ஆர்.ராமசாமி. ஜே.எம்.ஆருண், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், சீரஞ்சிவி, தணிகாசலம், கோபண்ணா, ஊர்வசி அமிர்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நல்லக்கண்ணு பேசுகையில், ‘’தமிழகம் சீரழிந்து கிடக்கிறது. தமிழக அரசுக்கு இன்று என்ன கொள்கை இருக்கிறது. தமிழக நிர்வாகம் சீர்குலைந்து குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. மதசார்பற்ற நிலை தமிழகத்தில் உருவாக வேண்டும்’’ என்றார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ‘’கருணாநிதி வைரவிழாவில் அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்த பெருமை மு.க,ஸ்டாலினுக்கு உண்டு. தமிழகத்தில் வீசும் பாஜ சாரல் இப்போது, எங்கள் மாநிலத்திலும் வீச தொடங்கியுள்ளது. மக்கள் சக்தி எங்களுக்கு இருக்கும் போது, தவிடு பொடியாக்கி விடுவோம். தமிழகத்தில் நடைபெறும் இந்த ஆட்சியை அகற்ற வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது. அதை மு.க.ஸ்டாலின் பொறுப்பு எடுத்து செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்க நாட்டு ஜனாதிபதியாக கூட ஆகிவிடலாம். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவராக வருபவர்கள் எந்தளவுக்கு அல்லோலப்படுவார்கள் என்பது உங்களுக்கு தெரியும். திருநாவுக்கரசர் எல்லாரையும் அரவணைத்து செல்கிறார்’’ என்றார்.
திமுக செயல் தலைவர் மு.கஸ்டாலின் பேசியதாவது: திருநாவுக்கரசர் திராவிட இயக்க அரசியலையும் பார்த்து இருக்கிறார். இப்போது, தேசிய அரசியலையும் பார்த்து கொண்டிருக்கிறார், திமுக தலைவர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றவர். வாஜ்பாயின் நன்மதிப்பையும் பெற்றவர். இப்போது, சோனியாகாந்தியின் நன்மதிப்பை பெற்று கொண்டிருக்கிறார். யாரிடத்திலும் அன்போடு பழகக்கூடிய ஆளுமையை பெற்றவர். என்னை பிரதர் என்று தான் அழைப்பார். அண்ணன் தம்பி என்ற சகோதர பாசத்துடன் பழக கூடிய சிறப்பு பெற்றவர். அவருடனான இந்த நட்பு எந்த காலத்திலும் தடைபடாது. கருணாநிதி மேல் உள்ள பாசத்தை பட்டுப்போகாமல் பாதுகாத்து வருகிறார். இன்று சட்டமன்றம் என்ற ஒன்று உள்ளது. ஆனால், அங்கு ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. நாங்கள் அனைவரும் அங்கு என்ன பாடு படுகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். கருணாநிதி முதல்வராக இருந்த போது, எதிர்கட்சி என்றால் கூட அவர்களுக்கு உரிய மரியாதையையும் உரிமையையும் தந்தார்.
இப்போது முதல்வராக இருக்க கூடியவர் வைத்திருக்க கூடிய துறைகளில் இருந்து கேள்வி நேரத்தில் ஒரு பதிலை கூட கேட்க முடியவில்லை. கருணாநிதி கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பே அவைக்கு வந்துவிடுவார். எல்லா நாளும் அவருடைய துறையில் இருந்து கேள்விகள் இருக்கும். அதற்கு சரியான விளக்கமும் அளிப்பார். திருநாவுக்கரசர் எந்த தொகுதியாக இருந்தாலும் அங்குள்ள பிரச்னைகளை எழுந்து பேச கூடியவர். அதை கருணாநிதியும் பாராட்டியுள்ளார்.
அப்போது, ஜனநாயக முறையில் சட்டமன்றம் நடைபெற்றது. திருநாவுக்கரசரின் 40 ஆண்டுகால வரலாறு திராவிட இயக்கத்திற்கு பயன்பட்டது. இப்போது, தேசிய பேரியக்கத்திற்கு பயன்பட்டு கொண்டு இருக்கிறது. இன்றைய நிலையில் மதவாத சக்திகளை முறியடிக்க இந்த விழாவின் மூலம் உறுதியேற்போம். சபதம் ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.