மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி : கோவை ஜி.எச்.சில் 110 பேர் அட்மிட்
7/13/2017 3:41:34 PM
அவிநாசி : திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த முதலிபாளையம் ஊராட்சி புதிய ஆதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயன்(33). கூலி தொழிலாளி. இவர்களது மகள் காவ்யா(4). இவர் இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்துவந்தார். காவ்யாவிற்கு கடந்த சில நாளாக காய்ச்சல் இருந்தது. சேவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று காய்ச்சல் அதிகரிக்கவே காவ்யாவை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே காவ்யா பரிதாபமாக இறந்தார். சிறுமிக்கு வந்தது டெங்கு காய்ச்சலா என சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள பூனாச்சியைச் சேர்ந்தவர் குமரேஷ்வரன் (38). இவரது மனைவி நித்யா (28). இவர்களின் 10 மாத பெண் குழந்தை ரிதன்யா காவேரி. இக்குழந்தைக்கு கடந்த 9ம் தேதி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அந்தியூர் மற்றும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று குழந்தை உயிரிழந்தது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மைய மருத்துவமனையாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினசரி 1,500க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழைக்காலத்தில் தற்போது காய்ச்சல் பரவல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து காணப்படுகிறது. கோைவ அரசு மருத்துவமனையில் இதுவரை காய்ச்சல் பாதிப்பு காரணமாக 110 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கு என அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.