தலைநகர் டெல்லியில் ஒரே வாரத்தில் 3 பாலியல் பலாத்கார சம்பவம்
7/10/2025 3:30:55 PM
புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் 3 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. 8 வயது சிறுமிகள் இருவரையும், 38 வயது மன நலம் பாதித்த பெண்ணையும் வேட்டையாடிய மிருகங்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் டெல்லி மக்கள் மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். முதல் சம்பவம் டெல்லியில் கிழக்குப் பகுதியில் நடந்துள்ளது. 38 வயதுடைய மன நலம் பாதித்த பெண்ணை டாக்சி டிரைவர் ஒருவர் அவரது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, நகருக்கு வெளியில் ஆளில்லாத இடத்தில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மருத்துவர்களின் கவனத்துக்கு வந்த இந்த சம்பவத்தை அவர்கள் போலீசில் தெரிவித்ததால் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். அடுத்த சம்பவம் 8 வயது சிறுமியை அவரது தந்தையின் நண்பரே பாலியல் வன் கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி மின்டோ சாலையின் நடைபாதையில் வசித்து வந்த குழந்தையின் பெற்றோரின் நண்பனே இந்த கொடூரத்தை நடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்று இரவு சாப்பிட்டு முடித்து விட்டு அவர்களது 8 வயது சிறுமியுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, நடு இரவில் குழந்தையை காணவில்லை. திடுக்கிட்ட பெற்றோர், அந்த வழி வந்த ரோந்து போலீஸ்காரர்களிடம் புகார் செய்துள்ளனர். கொஞ்ச நேரத்தில் சிறுமி அங்கு வந்துள்ளார். குழந்தையிடம் விசாரித்த போது, தந்தையின் நண்பர் ஒருவர் சிறுமி சாக்லேட் தருவதாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அடுத்த சம்பவம் டெல்லி கமலா மார்க்கெட் பகுதியில் நடந்துள்ளது.
8 வயது சிறுமி பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டியிருந்தார். அங்கு வந்த 36 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் சாக்லேட் தருவதாக சொல்லி அந்த சிறுமியை அருகிலுள்ள ரயில்வே ஜிம்மிற்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். ஒரே வாரத்தில் 3 பலாத்கார சம்பவங்கள் நடந்திருப்பது தலைநகருக்கு மீண்டும் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.