வாலிபரை கொன்று விபத்து போல் நாடகம் சினிமா டைரக்டர், 2 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்
7/4/2025 3:18:02 PM
பெரம்பலூர்: பெரம்பலூர் அரணாரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). கடந்த 28ம் தேதி இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ச் பகுதியில் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அருகில் பைக் கிடந்தது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மணிகண்டன், 2015ம் ஆண்டு அரசு பஸ் டிரைவர் வேலுசாமி என்பவர் கொலை வழக்கில் குற்றவாளி என்பதும் அவர் விபத்தில் இறக்கவில்லை. இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு விபத்து போல நாடகமாடி அங்கு வீசப்பட்டிருந்தார் என்பதும் தெரியவந்தது. வழக்கை கொலை வழக்காக மாற்றி பெரம்பலூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அரணாரை கிராமத்தை சேர்ந்தவரும், தமிழ்தேசம் திரைப்படம் மற்றும் குறும்பட இயக்குனருமான செல்வராஜ் என்ற அப்துல்ரகுமான்(42) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சதீஷ்குமார்(28) மற்றும் வேல்முருகன்(47) ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: அரசு பஸ் டிரைவர் வேலுசாமி கொல்லப்பட்ட வழக்கில் மணிகண்டனும், சினிமா டைரக்டர் செல்வராஜூம் குற்றவாளிகள். வழக்கினை சுமூகமாக பேசி முடிக்கலாம் என வேலுசாமி மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என மணிகண்டனிடம் செல்வராஜ் கூறினார். இதற்கு மணிகண்டன் மறுத்து விட்டார். இதனால் அவர் மீது இவர்களுக்கு பகை உண்டானது. இந்நிலையில் மணிகண்டன், செல்வராஜ் பெயரை கூறி சிலரிடம் பணமும் வாங்கி இருந்தாராம். ஆத்திரமடைந்த டைரக்டர் செல்வராஜ் தனது நண்பர்கள் சதீஷ்குமார், வேல்முருகன் ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை கடந்த 28ம் தேதி இரவு தீரன் நகர் ஆர்ச் அருகே அழைத்து வந்தனர். அப்போது அனைவரும் மது அருந்தினர். அப்போது கொலைவழக்கில் சமாதானம் பேசி முடிக்கவும், பணத்தை திருப்பி தரவும் மணிகண்டன் ஒத்துவரவில்லை. இதனால் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர் மயக்கமடைந்தார். அவர் பிழைக்கமாட்டார் என்பதை அறிந்து விபத்து போல நாடகமாட திட்டமிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை ரோட்டோரம் வீசிவிட்டு அவர் மேல் பைக்கையும் போட்டு விட்டு சென்றுவிட்டனர். பைக் விபத்தில் காயமடைந்தவர் போல ஏற்பாடு செய்துள்ளனர்.