டெல்லியில் அப்சல் குரு சர்ச்சைக்கு பிறகு மாயமான மாணவர் நஜீப் குறித்து தகவல் அளிப்பவருக்கு B10 லட்சம் சன்மானம் : சிபிஐ அறிவிப்பு
6/30/2017 3:44:08 PM
புதுடெல்லி : டெல்லியில் கடந்த ஆண்டு அப்சல் குரு சர்ச்சைக்கு பிறகு மாயமான ஜேஎன்யூ பல்கலை மாணவர் நஜீப் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு கடந்த 2013ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். இந்த சூழலில் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலை கழகத்தில் மாணவர்கள் சிலர் அப்சல் குரு நினைவு தினத்தை அனுசரித்தனர். அப்போது தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கன்யா குமார், உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த சூழலில் ஜேஎன்யூ மாணவர் நஜீப் அகமது கடந்த ஆண்டு அக்டோபரில் திடீரென மாயமானார். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.
இதையடுத்து தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவரது பெற்றோர் டெல்லி போலீசில் புகார் அளித்தனர். டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து எங்கு தேடியும் நஜீப் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் நஜீப் விவகாரத்தில் டெல்லி போலீசார் மெத்தனம் காட்டுவதாக கூறி நஜீப்பின் பெற்றோர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரினர். இதையடுத்து வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த சூழலில் நஜீப் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என சிபிஐ தெரிவித்துள்ளது. இதற்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளது.