நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் : புதுவை காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 5க்கு ஐகோர்ட் தள்ளிவைப்பு
6/30/2017 3:34:31 PM
புதுச்சேரி : புதுவையில் 2016 பொதுத்தேர்தலில் வென்ற காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்றதும் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்களுக்கு வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. இருப்பினும் 3 நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இதையடுத்து மத்திய பாஜ அரசு இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியது. இவ்விஷயத்தில் மாநில அரசுக்கு அக்கறை இல்லை எனக் கூறி மத்திய உள்துறை அமைச்சகமே 3 நியமன எம்எல்ஏ பதவிகளை நிரப்ப முடிவெடுத்ததாக தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்சியாளர்கள் உடனடியாக இப்பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனிடையே புதுவை ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான லட்சுமிநாராயணன், சென்னை ஐகோர்ட்டில் ஒருமனு தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 நியமன எம்எல்ஏக்களை நியமிக்க யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டம் வழிவகை செய்கிறது. அதன்படி புதுச்சேரிக்கு நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை நியமிக்க மத்திய அரசும், புதுவை தலைமை செயலரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்த நியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக புதுவை அரசிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை மாநிலத்தில் ஒரு ஆட்சி இருக்கும்போது அதை கலந்து ஆலோசிக்காமல் எந்த நியமன எம்எல்ஏக்களையும் நியமிக்கக் கூடாது. ஆனால் மத்திய அரசு 3 பேரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பவானி சுப்ராயன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது யூனியன் பிரதேசங்களில் நியமன எம்எல்ஏக்களை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகமும், புதுவை தலைமை செயலாளரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணையை வருகிற 5ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.