பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்
6/30/2017 3:32:17 PM
பவானி : ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சித்தோடு வசுவம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(58). இவரது மனைவி கோமதிதேவி (56). ஒரே மகன் சந்தோஷ்குமார்(26). இவர்கள் குடும்பத்தோடு ஈரோடு கொல்லம்பாளையத்தில் அவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். சந்தோஷ்குமார் பிடெக் படித்துவிட்டு ஈரோட்டில் மருந்து மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ளார். பழனிசாமி, ரியல் எஸ்டேட், வட்டித் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு, சித்தோடு, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் பலகோடி மதிப்பில் சொத்து உள்ளது. தனது தொழில் விரிவாக்கத்துக்காக பழனிச்சாமியிடம் சொத்துக்களை கேட்டு வந்தார். இதற்கு பழனிச்சாமி மறுப்புத் தெரிவித்ததால் அவர்களுக்குள் கடந்த சில மாதங்களாக தகராறு இருந்துள்ளது. மகனுக்கு ஆதரவாக கோமதிதேவியும், பழனிச்சாமியிடம் பிரச்னை கிளப்பி வந்தார். மேலும் தந்தை பெயரில் உள்ள சொத்து பத்திரங்களை எடுத்து சந்தோஷ்குமார் மறைத்துவைத்துக்கொண்டார். இதனால், குடும்பத்தில் தகராறு அதிகரித்தது. இதையடுத்து, சித்தோடு வசுவப்பட்டியில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு சென்ற தனது தாய் பாவாயி (80)யுடன் கடந்த இரண்டு மாதமாக பழனிச்சாமி வசித்தார். மகன் சந்தோஷ்குமாரும், மனைவி கோமதிதேவியும் ஈரோடு கொல்லம்பாளையம் திரு.வி.க. நகரில் தனியாக வசித்தனர். இதையடுத்து உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை சந்தோஷ்குமார், தாய் கோமதிதேவியுடன் சித்தோடு வசுவப்பட்டியில் உள்ள வீட்டுக்கு வந்து, பழனிச்சாமியிடம் சொத்து கேட்டு தகராறு செய்தனர். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், துப்பாக்கியால் பழனிச்சாமியை நோக்கி சரமாரியாக சுட்டாராம். இதில், ரத்தவெள்ளத்தில் சாய்ந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு அறையில் படுத்திருந்த பாவாயி சத்தம் கேட்டு எழுந்தபோது, அவரையும் அரிவாளால் வெட்டி துப்பாக்கியால் சுட்டாராம். இதில், பாவாயியும் அதே இடத்தில் உயிரிழந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டதால் அப்பகுதியில் வசித்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தாயும் மகனும் காரில் ஏறி சென்றுவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நேற்று மதியம் கோமதிதேவியும், சந்தோஷ்குமாரும் சித்தோடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.
போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘சந்தோஷ்குமாரும், கோமதிதேவியும் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் துப்பாக்கி, அரிவாள், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரை குமாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் நிறுத்தியிருந்தனர். அதனையும் பறிமுதல் செய்து விட்டோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது என்றனர். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி இந்திய தயாரிப்பு என்றும் இத்துப்பாக்கிக்கு இக்குடும்பத்தினர் யார் பெயரிலும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்றும் இது கள்ளத்தனமாக வாங்கப்பட்டது எனவும் போலீசார் தெரிவித்தனர். கோமதிதேவி, பழனிசாமிக்கு இரண்டாவது மனைவி என்றும் முதல் மனைவி திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டதால் இவரை இரண்டாவது திருமணம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.