ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் : ஜெட்லி தகவல்
6/29/2017 3:45:54 PM
புதுடெல்லி : மத்திய அரசின் மிகப் பெரிய வான் வழி போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் வான் வழி போக்குவரத்து நிறுவனத்தில் மிகப் பெரிய ஒன்றாகும். இதன் மூலம் 140 விமானங்கள் இயக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள 41 நகரங்களுக்கும், இந்தியாவில் 72 நகரங்களையும் இது இணைக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் 14 சதவீத சந்தையை ஏர் இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவன்த்திற்கு ரூ.52 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடன் சுமை இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அதன் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து பங்குகள் விற்பனை, அதில் மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து முடிவு செய்ய நிதி அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த குழு விரைவில் இதற்கான முடிவுகளை எட்ட உள்ளது என்றார்.
கடந்த 2001ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த பாஜ கூட்டணி அரசு ஏர் இந்தியாவின் 60 சதவீத பங்குகளையும், இந்தியன் ஏர்லைன்சின் 51 சதவீத பங்குகளையும் தனியாருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக அப்போது அது கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியா பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.