ஈவ் டீசிங், மாணவிகளுக்கு செருப்படி இளைஞர்களை கைது செய்ய கோரி பஸ் சிறைபிடிப்பு; சாலை மறியல்
6/29/2017 3:41:37 PM
குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக தண்ணீர்ப்பள்ளி, பரளி, நால்ரோடு, கருங்கலாப்பள்ளி, பெட்டவாய்த்தலை தடத்தில் ஒரு அரசு பஸ் காலை, மாலை இருவேளை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் பயணம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து இந்த பஸ்சில் செல்லும் மாணவிகளை மேட்டுமருதூரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அவர்களை கருங்கலாப்பள்ளி இளைஞர்கள் தட்டிக்கேட்டதால் அவர்கள் ஓடிவிட்டனர். நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி மாணவ, மாணவிகள் அந்த பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். பஸ் தண்ணீர்ப்பள்ளி சென்றவுடன் மேட்டுமருதூரை சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து பஸ்சை நிறுத்தி கருங்கலாப்பள்ளி செல்லும் 20க்கும் மேற்பட்ட 10, 12 வயதுடைய மாணவிகளை செருப்பாலும், குச்சியாலும் அடித்து மிரட்டினர். இதை தாங்க முடியாத மாணவ, மாணவிகள் கதறினர். இதுகுறித்து கருங்கலாப்பள்ளிக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனால் கருங்கலாப்பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து கிராமத்துக்கு ஓட்டிச் சென்று தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் அங்கு வந்து இளைஞர்கள் தாக்கியதில் காயமடைந்த மாணவ, மாணவிகளை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர்.
கிராம மக்கள் சார்பில் குளித்தலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து நேற்றிரவு மேட்டுமருதூருக்கு சென்று சம்பந்தப்பட்ட இளைஞர்களை வலை வீசி தேடினர். அவர்கள் தலைமறைவாகிவிட்டதால் ஊர் முக்கியஸ்தரிடம் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞர்களை தாங்களே பிடித்து வந்து ஒப்படைப்பதாக ஊர் முக்கியஸ்தர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.