மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபருக்கு போலீஸ் வலை : தட்டி கேட்ட 2 பேருக்கு அடி: 6 பேர் கைது
6/28/2017 3:53:20 PM
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயது மாணவி, அருகில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இதே பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்துவர நுங்கம்பாக்கம் காலனியை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பள்ளி முடிந்து சைக்கிளில் எதிரே வந்த 11 வயது மாணவியை வழிமறித்து, முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெற்றோரிடம் அழுதபடி மாணவி கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் இருவர், சுரேஷ் வீட்டுக்கு சென்று, தட்டி கேட்டுள்ளனர். தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர், தட்டிக்கேட்ட இருவரையும் தாக்கினர். புகாரின்பேரில் மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிந்து, நுங்கம்பாக்கம் காலனியை சேர்ந்த அருண்குமார் (28), சரத்குமார் (27), டில்லிராஜ் (30), கார்த்திக் (29), கவுரிசங்கர் (30), கிஷோர்(31) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மாணவிக்கு முத்தம் கொடுத்த சுரேஷை தேடி வருகின்றனர்.