எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் மனு தாக்கல்
6/28/2017 3:43:17 PM
புதுடெல்லி : ஜனாதிபதி பிரணாப் பதவிக்காலம் முடிவதையொட்டி வருகிற ஜூலை 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜ கூட்டணி சார்பில் பீகார் கவர்னர் ராம் நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 23ம் தேதி மனு தாக்கல் செய்தார். மேலும் தனக்கு ஆதரவு கேட்டு உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் செல்லும் ராம் நாத் கோவிந்த் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாநில கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இந்த சூழலில் காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமார் இன்று மனு தாக்கல் செய்ய புறப்பட்டார். முதலில் அவர் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா இல்லத்திற்கு சென்றார். பின்னர் அங்கு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் இன்று காலை 11.10 மணிக்கு சோனியா தலைமையில் நாடாளுமன்றத்திற்கு வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா முன்னிலையில் மக்களவை செயலாளர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அருண் மிஸ்ராவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருடன் 11 மாநில கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், தேசிய வாத காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவார், பிரபுல் படேல், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மல்லிகார்ஜூன கார்கே, ராம் கோபால் யாதவ், திரிணாமுல் எம்பி டெரக் ஓ பிரெய்ன், திமுக எம்பி கனிமொழி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி. ராஜா, சுதாகர் ரெட்டி, காங்கிரஸ் முதல்வர்கள் பஞ்சாப் அமரீந்தர் சிங், கர்நாடகா சித்தராமைய்யா, புதுச்சேரி நாராயணசாமி, இமாச்சல பிரதேச வீரபத்ர சிங், மேகாலயா முகுல் சங்மா, கர்நாடக முன்னாள் அமைச்சர் மகாதேவப்பா ஆகியோர் மனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மனு தாக்கல் செய்த மீரா குமாருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான மீரா குமார் வேட்பு மனு தாக்கலைத் தொடர்ந்து வருகிற 30ம் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். குஜராத்தில் உள்ள காந்தியின் ஆசிரமமான சபர்மதியில் இருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். வருகிற ஜூலை முதல் வாரத்தில் அவர் தமிழகம் வருகிறார். சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.